நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தடையை மீறி ரசிகர்கள் உள்ளே சென்றதால் அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம்  ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில்,  ஏற்கனவே இப்படத்தில் இருந்து  ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 






இதனிடையே இன்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகளிடம் வழங்கப்பட்ட நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்மான சம்பவங்களை நிகழ்த்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கப்போவதால் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 






அதேசமயம் பாஸ்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் பாஸ் இல்லாத ரசிகர்கள் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் குவிந்தனர். மேலும் சாலைகளில் விஜய் மக்கள் மன்ற கொடியுடன்  வாகனப்பேரணி ரசிகர்கள் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாஸ் இல்லாத ரசிகர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதிக்கவில்லை. 






ஆனால் தடையை மீறி உள்ளே வந்த ரசிகர்கள் போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்றனர். இதில் ரசிகர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் சிலருக்கு காயம் ஏற்பட்டது.