மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போலவே அவரது செயல்பாடுகளும் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்துமாறு மாணவ,மாணவிகளைக் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி விஜய்யின் அரசியல் பயணத்தில் முதற்படியாக பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில், தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை நடிகர் விஜய் ஆலோசனை செய்து, போட்டோஷூட் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியானது நாளை காலை 9மணிக்கு பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.