வாரிசு படத்தின்  ஆடியோ நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் விஜய் வெளிநாடு செல்லவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. 


தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதால் பட அறிவிப்பின் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.






முன்னதாக இப்படத்தில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே வெளியானது. விஜய் பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது. பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பில் யானைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க விலங்குகள் நல வாரியம் வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.  


வாரிசு படம் தெலுங்கு வெளியீட்டிலும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம்  அப்பிரச்சினை முடித்து வைக்கப்பட்டது. இப்படி வழக்கம்போல பிரச்சினைகளை சந்தித்து வரும் விஜய் படங்களின் வரிசையில் வாரிசும் இணைந்துள்ளது. மேலும் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என கவலையடைந்துள்ள நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில் விஜய்யின் பேச்சு எந்த மாதிரியாக இருக்கும் என இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது


இந்நிலையில் டிசம்பர் மாத பிற்பகுதியில் இந்நிகழ்ச்சி நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியான நிலையில், இதனை முடித்துக் கொண்டு தனது மனைவி சங்கீதாவுடன் விஜய் லண்டன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தனது மனைவி குடும்பத்தினருடன் இணைந்து விஜய் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் சங்கீதாவின் பெற்றோரை சந்திப்பதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.