டெல்லியில் நடந்த ஷர்த்தா கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார்.


இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அடங்குதவற்குள் இதேபோன்ற கொலை சம்பவங்கள் நடந்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


அதன் தொடர்ச்சியாக, டெல்லியின் கிழக்கு பகுதியில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொலை நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.


கணவரை, அவரது மனைவியும் அவரது மகனும் கொன்று, அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் கிழக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. டெல்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த ஜூன் மாதம், பாண்டவ் நகரில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை போலீசார் முதலில் கண்டெடுத்தனர். ஆனால், அவை சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. ஷ்ரத்தா கொலை வழக்கின் கொடூர தகவல்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு, அடையாளம் தெரியாத உடல் உறுப்புகள் அவருடையதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. 






ஆனால், தற்போது அவை பாண்டவ் நகரில் வசிக்கும் அஞ்சன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருமணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பூனம் மற்றும் அவரது மகன் தீபக் ஆகியோர் சேர்ந்து கணவரை கடந்த ஜூன் மாதம் கொலை செய்துள்ளனர்.


கொலை செய்யப்பட்டுள்ள கணவர், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கோபமடைந்த பெண், மகனுடன் சேர்ந்து தனது கணவரை 22 பாகங்களாக வெட்டி கொலை செய்துள்ளார்.


பாதிக்கப்பட்டவருக்கு முதலில் தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். பின்னர், அவரது உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பாண்டவ் நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். 


அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இரவில் தனது கையில் பையுடன் தீபக் நடந்து செல்வது அதில் பதிவாகியுள்ளது.


வெட்டப்பட்ட உடல் துண்டுகளை தூக்கி எறிவதற்காக அவர் சென்றிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். அவரது தாயார் பூனம் அவரைப் பின்தொடர்கிறார். பட்டப்பகலில் எடுக்கப்பட்ட வேறொரு வீடியோவில், அவர்கள் உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்காக இடத்தை தேடி அலைவது பதிவாகியுள்ளது.


டெல்லி கொலை வழக்கில் அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.