Vijay: அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிக்கு, விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 


தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் விஜய், லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தாலும், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவது, கல்வி வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் செய்து வரும் விஜய் அரசியல் நகர்வுக்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வந்தார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க பிரதிநிதிகள் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றிப்பெற்றனர். 


தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் அடிக்கடி விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து பேசும் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அரசியல் கட்சி தொடங்கி இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், அடுத்ததாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் கூறியிருந்தார். 


விஜய்யின் இந்த அரசியல் எண்ட்ரிக்கு பிற அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துகள் என்றார். இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் ரஜினியை தொடர்பு கொண்ட விஜய், நன்றி சொன்னதாக கூறப்படுகிறது.


இதேபோன்று பாலிவுட் பாட்சாவான ஷாருக்கான் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக கூறப்படுகிறது. இன்று காலை ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாக குறிப்பிட்டார். 


மேலும் படிக்க: Actor Vishal: அரசியல் வருகை.. அறிக்கை மூலம் நேரம் குறித்த நடிகர் விஷால்


TVK Vijay: புஸ்ஸி ஆனந்தை வைத்து அறிக்கை விடாதீங்க.. யாரையும் நம்பாதீங்க - விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை!