Vijay: சினிமாவில் தனக்கு என இருக்கும் நவரத்தின கிரீடத்தை மக்கள் பணிக்காக விட்டுக் கொடுக்கும் அளவுக்கு இவ்வளவு பெரிய தியாகம் வேண்டுமா என விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த லியோ படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றிபெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் (GOAT) படத்தில் விஜய் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் லியோ 2 படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அரசியலில் ஆர்வம் கொண்ட விஜய் அதற்கான பணிகளில் சைலண்டாக ஈடுபட்டார். கடந்த ஆண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி பாராட்டியது, மாலை நேரக் கல்வி வழங்குவது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட பணிகளை செய்து வந்த விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது.
அதன்படி, பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார். விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு திரைப் பிரபலங்களும், முன்னணி கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்க்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வாழ்த்து செய்தியில், “நூறு கோடிக்கு மேல் சன்மானம் பெரும் விஜய், தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது.
நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை, நவரத்தின கிரீடத்தை கழற்றி வைக்கப் போகிறார் என்று மனம் சட்டென சங்கடம் கொண்டது. வேண்டுமா இவ்வளவு தியாகம்..? மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக உயரும் விஜய்யை வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.