நடிகர் சார்லி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபைண்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதைகளை மையமாக கொண்டு வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அந்தப் படத்தின் இயக்குனர் பிரபலமானவர் அல்லது புதுமுக இயக்குனர் என்பதெல்லாம் தேவையில்லை. கதைக்களம் சரியாக இருந்தால் எத்தகைய படத்தையும் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதற்கு உதாரணம் பல படங்கள் இருக்கிறது. அப்படி இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்துடன் ஃபைண்டர் படம் தயாராகியுள்ளது.
அரபி ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ஜர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ஃபைண்டர் படத்தில் தமிழ் சினிமாவில் 700 க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை குணச்சித்திரம் உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து அசத்திய நடிகர் சார்லி நடித்துள்ளார். இந்த படத்தின் தொடக்க விழா கடந்தாண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது அதனை தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஃபைண்டர் படத்தில் அமெரிக்க சிறையில் செய்யாத குற்றத்திற்காக நீண்டகாலம் சிறையில் தண்டனை அனுபவிக்கும் இந்தியர்கள் பற்றியும், அவர்களை வெளியே எடுக்க உதவி செய்யும் நிறுவனத்தை பற்றியும் கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.