தேசிய அரசியலில் மேலும் ஒரு அரசியல் பரபரப்பாக, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியில் பாஜக ஆட்சி:


கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பல மாநில கட்சிகள் உடைவது, சிறிய கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவது மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் தான், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் உடைந்த கட்சிகள், வளைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், மிரட்டப்பட்ட தலைவர்கள் தொடர்பான விவரங்களை இங்கு அறியலாம்.


அருணாச்சல பிரதேசம் - 2016


அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெறும் 11 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்றது. ஆனால், 2016ம் ஆண்டில் காங்கிரஸின் 40 எம்.எல்.ஏக்களை வளைத்து ‘மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்க வைத்து,  அதனுடன் இணைந்து ஆளுங்கட்சியானது பாஜக.


கோவா - 2017


தனிப்பெரும்பான்மையுடன் 17 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அக்கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி வைத்து வெறும் 13 இடங்களில் வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.


மேகாலயா - 2018


21 தொகுதிகளை வென்ற காங்கிரஸை வீழ்த்த 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க. தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட இதர மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை வளைத்து போட்டது.


கர்நாடகா - 2019


2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 104 இடங்களை பா.ஜ.க. வென்றிருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகியது. அதன் பிறகு 80 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் 37 தொகுதிகளை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஓராண்டு ஆட்சி நடத்தியது. ஆனால் காங்கிரஸின் 16 எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் சரிய,  காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியை கவிழ்த்து ஆட்சியில் ஏறியது பாஜக.


சிக்கிம் - 2019


2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பிராந்திய கட்சிகளான சிக்கின் கிராந்திகாரி மோர்ச்சா 17ம், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வென்றது. ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாரதிய ஜனதா கிராந்தகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. அதைதொடர்ந்து,  சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏக்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.  அதன் பிறகு நடந்த 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 2 இடங்களை வென்றது. தொடக்கத்தில் ஒரு எம்.எல்.ஏக்கூட சிக்கிம் சட்டமன்றத்தில் தற்போது பாஜகவிற்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.


பீகார் - 2017 


2015ல் நடந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து மெகா கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் லாலு - நிதிஷ் கூட்டணியை உடைத்து நிதிஷ் குமார் உடன் சேர்ந்து  பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறியது.


மத்திய பிரதேசம் - 2020


2018ல் 114 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி 121 எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால்  கமல்நாத் முதலமைச்சராக பதவியேற்ற 2 ஆண்டுகளில்,  காங்கிரசை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா உட்பட 29 பேர் பாஜகவில் இணைய அக்கட்சி அங்கு ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.


புதுச்சேரி - 2021


2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி நீடித்த நிலையில், 2 அமைச்சர்கள் மற்றும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய,  3 நியமன எம்எல்ஏக்கள் உதவியுடன் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது.


மகாராஷ்டிரா - 2022


2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மயை பெறாவிட்டாலும், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து அவசர அவசரமாக ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. அதைதொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியமைத்தது. ஆனால், கடந்த ஆண்டு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சேர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பதவியேற்றார். இதனால் சிவசேனா கட்சி இரண்டாக உடந்தது. அதைதொடர்ந்து தற்போது தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பாஜக கூட்டணியில் இணைய, அக்கட்சி இரண்டாக உடைந்துள்ளது. 


கட்சி தாவிய தலைவர்கள்:


நாரயண் ரானே, சுவேந்து அதிகாரி, ஹிமந்த பிஸ்வா சர்மா, பாவ்னா, காவ்லி, யஷ்வந்த் ஜாதவ், பிரதாப் சர்நாயக் உள்ளிட்டோருக்கு எதிராக, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு விசாரணை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தன. ஆனால்,  aவர்கள் அனைவரும், பாஜகவில் சேர்ந்த பிறகு அந்த வழக்குகளின் நிலை என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.