நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


யார் இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்?


ஒரு நட்சத்திர நடிகராக உருவாவதற்கு முன் விஜய் சேதுபதியை நாம் அனைவரும் சில  படங்களில் பார்த்து கடந்து சென்றிருப்போம். புதுப்பேட்டை படத்தில் சிறு வசனங்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் கபடி ப்ளேயராக, சுந்தரபாண்டியில்  வில்லனாக, நான் மகான் அல்ல படத்தில் கடன் கேட்கும் நண்பனாக,  இப்படியான சில சில கதாபாத்திரங்களை இன்று திரும்பி பார்த்தால், ஒரு நல்ல நடிகன் பெயர் அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு சில காட்சிகளில் மக்களிடம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று சொல்லலாம். விஜய் சேதுபதி அப்படியான ஒரு நடிகர்!




சில படங்களை கவனித்துப் பார்த்தால் அந்தக் காட்சியில் ஒரு நடிகர் அவ்வளவு அலட்சியமாக நடித்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். கேமரா ஹீரோவின் பின்னால் இருக்க, அவரது தலைகூட அசையாமல் இருக்கும்.  ஆனால் உருக்கமான ஒரு டயலாக் டப்பிங்கில் சேர்க்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஒட்டுமொத்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்துபோகும் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டை கவனித்தால், அந்தக் காட்சியில் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்ப்புடன் வெளிப்பட அந்த நடிகர் செய்துள்ள முயற்சி நமக்குத் தெரியும்.




அப்படியான ஒரு இடத்தில் இருந்து வரும் விஜய் சேதுபதி பெரிய படமோ சின்ன படமோ, சுமாரான கதையோ சூப்பரான கதையோ அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்துவது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


 மக்கள் செல்வன்


தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தபடியே இருந்தார். தொடர்ந்து பீட்சா,  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் போன்ற வெற்றிப் படங்கள் அவரை ஒரு தேர்ந்த நடிகனாக நிரூபித்தன.


பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் மாதிரியான படங்களின் கதைக்களங்கள் தன்னளவிலேயே சுவாரஸ்யமானவை. இந்தக் கதைக்களங்களோடு தன்னை மிக லாவகமாக பொருத்திக் கொண்டு அதில் தனது தனித்துவத்தையும் விஜய் சேதுபதி வெளிப்படுத்தினார்.


பீட்சா படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி “பீட்சா டெலிவரி பன்ன வந்தேன் சார்” என்று பேசுவார். இந்தக் காட்சிகளில்  அவரது உச்சரிப்பில் இருக்கும் தனித்துவத்தை கவனித்து பாருங்கள்.. அதேபோல் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்” படத்தில்  ”என்னாச்சு” என்று சொல்வது எல்லாம் தன்னை தனித்துவமாக விஜய் சேதுபதி நிலைநிறுத்திக் கொண்ட இடங்கள்.




வெகுஜன சினிமா இல்லாமல் ஆரஞ்சு மிட்டாய், பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற அவரது படங்கள், விஜய் சேதுபதி, ஸ்டார் ஆவதை தனது நோக்கமாக கருதவில்லை என்பதை வெளிப்படையாக காட்டின.


பான் இந்தியா ஸ்டார்!


வருடத்திற்கு ஐந்து படங்கள் நடிக்கும் விஜய் சேதுபதி இன்னும் சில ஆண்டுகள் தான் சினிமாத் துறையில் தாக்கு பிடிப்பார் என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் இன்று தனக்கான ஒரு வெற்றி ஃபார்முலாவை அவர் உருவாக்கி காட்டியிருக்கிறார். ரொமான்ஸ், மாஸ், டயலாக் டெலிவரி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என எதுவாக இருந்தாலும் அதை இன்னொரு நடிகரை பிரதி செய்யாமல் தன்னுடைய ஸ்டைலில் செய்துகாட்டியவர்.


எந்த ரோலாக இருந்தாலும் அதில் தான் என்ன புதிதாக செய்யப் போகிறேன் என்பதே அவரது நோக்கம் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கள் செல்வன்


மகாராஜா






தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா படத்தின் போஸ்டர் ஒன்று அவரது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.