பொங்கலை முன்னிட்டு நடிகர் சந்தானம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் சந்தானம். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் கிக், டிடி ரிட்டர்ன்ஸ், 80ஸ் பில்டப் ஆகிய 3 படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்துள்ளார். சந்தானத்தை வைத்து ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு வெளியான டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என பலரும் நடித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் தாடியுடன் சந்தானம் இருக்கும் கெட்டப் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ட்ரெய்லர் வெளியானது. அதில் ”சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? என்ற சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் வீட்டில் விளக்கு ஏற்றும் வீடியோவை பதிவிட்டு அதனுடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வசனத்தையும் இணைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.
இதில் சாமியே இல்லன்னு சொன்ன ராமசாமி என்ற வசனம் தந்தை பெரியாரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளதாக சந்தானத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிலர் சந்தானத்தை அவர் சார்ந்த சாதி ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் திராவிட கட்சிகளால் போற்றப்படும் பெரியார் பற்றி சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இப்படி ஒரு வசனம் வைத்துள்ள நிலையில், அதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடலாமா? என சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.