நடிகர் பிரபுதேவா - ஹிமானி சிங் தம்பதிக்கு குழந்தை பிறந்த தகவல் கடந்த வாரம் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது. 50 வயதில் நடிகர் பிரபுதேவா பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும், இந்த மகிழ்ச்சியில் தான் திருப்பதி கோயிலுக்கு பிரபுதேவா - ஹிமானி சிங் தம்பதி முன்னதாக தரிசனம் செய்ய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.


50 வயதில் அப்பா


இத்தகவலை முன்னதாக பிரபுதேவா- ஹிமானி சிங் இருவருமே உறுதிப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பிரபுதேவா முதன்முறையாக தனக்கு குழந்தை பிறந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.


தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தற்போது பேட்டி அளித்துள்ள பிரபுதேவா, “எனக்கு குழந்தை பிறந்துள்ளது உண்மைதான், இந்த வயதில் (50) மீண்டும் நான் தந்தையாகியுள்ளேன்; நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.


நிறைய வேலை செய்துவிட்டதாக தோன்றுகிறது, அதனால் எனது பணிச்சுமையை ஏற்கெனவே குறைத்து விட்டேன். எனது குடும்பம் மற்றும் மகளுடன் இனி நேரம் செலவிட விரும்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.


முதல் மனைவியுடன் விவாகரத்து


முன்னதாக தன் சினிமா பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் டான்சரான ரமலத் என்பவரை பிரபுதேவா காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில்,கடந்த 2008ஆம் ஆண்டு இவர்களது மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்தார் .


அதனைத் தொடர்ந்து முதல் மனைவி ரமலத் உடனான பல்வேறு கருத்து வேறுபாடுகள், நடிகை நயன்தாராவுடனான காதல் என தொடர்ந்து பேசுபொருளாகி வந்தது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு பிரபுதேவா - ரமலத் தம்பதி விவாகரத்து பெற்றனர்.


அதன் பின் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த நடிகர் பிரபுதேவா, கொரோனா ஊரடங்கின் மத்தியில் 2020ஆம் ஆண்டு ஃபிசியோதெரபிஸ்ட்டான ஹிமானியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.


திருப்பதி கோயிலுக்கு வருகை


இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளை முன்னிட்டு தன் இரண்டாவது மனைவி ஹிமானியுடன் முதன்முறையாக திருப்பதி ஏழுமலையானை சந்திக்க வருகை தந்தார் பிரபுதேவா.


இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாகல் தான் திருப்பதிக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இத்தகவலை பிரபுதேவாவே உறுதி செய்துள்ளார். 


பழம்பெரும் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா, கொரியாகிராஃபர், நடிகர், இயக்குநர் என பன்முக நாயகனாக தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  கோலோச்சி வருகிறார். மேலும், இவரது சகோதரர்களான ராஜூ சுந்தரம், நாகேந்திரப் பிரசாத் இருவரும் இதேபோல் கோலிவுட்டில் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.


இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில், சுந்தரம் மாஸ்டரின் குடும்பத்தில் பிரபுதேவாவுக்கு தான் முதன்முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.