நாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1926 ஆம் ஆண்டு துவக்க பள்ளியாக துவங்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 1985 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாகவும் 2012 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகவும் 10 கிராமங்களைச் சேர்ந்த 137 மாணவர்கள் 113 மாணவிகள் எனும் 250 பேர் படித்து வரும் பள்ளியில் கடந்த ஆண்டு முன்பு வரை பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி வழங்கியது. இப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் மிக மோசமாக சேதம் அடைந்ததால் மூன்று வகுப்புகள் நடைபெற்ற ஓட்டுக் கட்டிடம், இரண்டு வகுப்புகள் நடைபெற்ற கான்கிரீட் கட்டிடம், ஆய்வகம் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.



 

9 முதல் 12-ம் வரையிலான வகுப்புகள் மட்டும் புதிதாக கட்டப்பட்ட ரெண்டு கான்கிரீட் கட்டிடங்களில் நடைபெற்று வருகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்பறைகள் இல்லாததால் எதிரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், அருகில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் என கடந்த ஆண்டு வரை மாணவ மாணவிகளை அமர வைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பாண்டு பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை துவங்கிய நிலையில் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கோவிலில் இடம் பெற மறுத்ததால் பள்ளி வளாகத்திலேயே உள்ள வேப்ப மரத்தடியில் கலை நிகழ்ச்சிகளாக அமைக்கப்பட்ட சிறிய மேடையிலும் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனல் காற்றை தாக்கு பிடிக்க முடியாமல் மாணவர்கள் தவித்து பயின்று வருகின்றனர்.



 

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயராஜ் தெரிவிக்கும்போது, “வட்டாரத்தில் எங்கும் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததோடு கல்வியின் தரத்தால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஆய்வுக்கூடம் இல்லாததால் இங்கு பயிலும் மாணவர்கள் நாகூரில் உள்ள மற்றொரு பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. போதுமான கட்டிடம் அடிப்படை வசதி இல்லாத ஆசிரியர்களால் கற்பித்தல் திறன் குறைந்தால் தொடர்ந்து 100% தக்க வைத்த பள்ளி கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துவிட்டது. இவ்வாண்டு மாணவிகள் சேர்க்கையும் குறைந்து உள்ள நிலையில் தொடர்ந்து அரசிடம் மனு கொடுத்து வருகிறோம். உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் கொண்டு இப்பள்ளிக்கு உரிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆயுத கூடங்கள் அமைத்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.



 

 இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் கேட்டபோது, பள்ளிக்கு தேவையான கட்டிட வசதிகள் செய்ய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5 மாதத்திற்குள் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், அதுவரை மாற்று ஏற்பாடு மற்றும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.