நடிகர் விஜய் இரண்டாவது நாளாக மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரவு நேர பாடசாலை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என, விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், உள்ளிட்டோருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்தார். நடிகர் விஜய் தந்தை மீதே வழக்கு தொடர்ந்ததால் இந்த சம்பவம் பேசு பொருளானது.


ஆனால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வந்ததுடன் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் தான் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். விஜய் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


சமீபத்தில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வும், விழாவில் விஜய் பேசிய கருத்துக்களும் அவர் அரசியலுக்கு வருவதற்கான அஸ்திவாரமாக பார்க்கப்பட்டது. விஜய் அரசியலுக்கு வருவார் என்பது தான் செய்தி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் கண்டெண்ட் ஆக மாறியது. நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்தவர்கள் கூட, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது ஒரு நல்ல விஷயம் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கும் மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்து அழைத்துச் சென்றதற்கும் அவர் நிர்வாகிகளை பாராட்டியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் இன்று இரண்டாவது நாளாக மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் இரவு நேர பாடசாலை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இரவு நேர பாட சாலைக்கான இடம் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் தேர்வு செய்து தரப்படும் என்றும் இதற்கான வாடகையும் விஜய் மக்கள் இயக்கத்தால் கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ஆம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முடிவு செய்து இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.