தமிழ் திரையுலகம் லியோ, ஜெயிலர், மாவீரன் என அடுத்தடுத்து ஏராளமான பெரிய படங்கள் வெளியிட்டீற்காக காத்திருக்கிறது. இதில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தற்போது தமிழ் திரையுலகம் காத்திருப்பது லியோ திரைப்படத்திற்காகவே.


லியோ:


வித்தியாசமான ஆக்‌ஷன் திரைக்கதையை களமாக கொண்டு திரைப்படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 2வது திரைப்படம் லியோ. விக்ரம் பட வெற்றிக்கு பிறகு தனக்கென்று ஒரு யுனிவர்சை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அதன் தொடர்ச்சியாகவே லியோ படத்தை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். லியோ படமும் அதன் தொடர்ச்சியாகவே உருவாகியுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. படத்தின் கிளிம்ப்ஸ், படப்பிடிப்பு தளங்களும் அதையே நமக்கு உணர்த்துகிறது.




விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என பலர் நடித்திருந்தாலும் கடைசி காட்சியில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம்தான் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. இந்த நிலையில், லோகேஷ் யுனிவர்சிற்குள் வரும் திரைப்படமாக இருந்தால் ரோலக்சை விட பலமிகுந்த கதாபாத்திரமாக விஜய்யை காட்ட வேண்டிய அவசியம் இயக்குனருக்கு உள்ளது. ரசிகர்களும் அதையே விரும்புவதை சமூக வலைதளங்களில் நாம் காண முடிகிறது. ஏனென்றால் சூர்யாவை விட அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகராக விஜய் உலா வருகிறார்.


ரோலக்சை மிஞ்சுவாரா லியோ:


விக்ரம் படத்தில் ரோலக்சை மிகவும் கொடூரமான, ஈவு இரக்கமற்றவராக லோகேஷ் கனகராஜ் காட்டியிருப்பார். அந்த ரோலக்ஸ் கதாபாத்திரை மிஞ்சும் அளவிற்கு இருக்க வேண்டுமென்றால் ரோலக்சை விட மிக கொடூர வில்லனாக விஜய் கதாபாத்திரம் இருக்க வேண்டும். அல்லது ரோலக்சே அஞ்சும் அளவிற்கு ஒரு நபராக விஜய்யின் கதாபாத்திரம் இருக்க வேண்டும். 'பக்கத்து வீட்டு பையன், குடும்பத்தில் ஒருவர் போல' என்ற இமேஜ் பெற்ற விஜய் மிக குரூர கதாபாத்திரத்தில் நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.




விஜய்யின் ரசிகர்களை கடந்து அவரது படங்களை குடும்பங்களுடனும், குழந்தைகளுடனும் சென்று மக்கள் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் குடும்பங்களின் வரவேற்பை அதிகளவில் பெற்றுள்ள விஜய்யை, ரோலக்சை விட பலமிகுந்த நபராக காட்ட நினைத்து, அவரது கதாபாத்திரத்தை கொடூரமாக கட்டமைத்திருந்தால் லோகேஷ் கனகராஜிற்கு அதுவே பின்னடைவாக அமையவும் வாய்ப்பு உள்ளது.


லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களின் அடிப்படை கரு போதைப்பொருள் கடத்தலை மையமாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் லியோவும் போதைப்பொருளை மையமாக கொண்டு எழுதப்பட்டிருப்பதாகவே கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.


சவால் என்ன?


முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தில் ஒரு விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் ஏற்க மறுத்ததாலே அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. போக்கிரி படத்தில் விஜய் போக்கிரித்தனம் செய்யும் நபராக உலா வந்தாலும், இறுதியில் பொறுப்பான காவல்துறை அதிகாரியாக இருப்பதற்காக அதுபோன்று உலா வந்ததாலே விஜய் கதாபாத்திரத்தை நியாயம் செய்ததே போக்கிரி படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மாஸ்டர் படத்தில்கூட விஜய் சேதுபதியிடம் இருந்து சிறுவர்களை காக்கும் ஆசிரியராகவே விஜய் நடித்திருந்தார்.


இதுபோல, இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ஸ்கோர் செய்யாத விஜய் இந்த படத்தில் ரோலக்சை மிஞ்சும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அதை ரசிகர்களை ஏற்பார்களா?  விஜய்யின் கதாபாத்திரம் அவ்வாறு இருந்தால் அதை லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் ஏற்கும் விதத்தில் கட்டமைப்பது எப்படி? என்பதும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு உள்ள மிகப்பெரிய சவால் ஆகும்.