கேரளாவின் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் என்ற பகுதியில் ஒன்பது வயது சிறுமியை மூன்று தெரு நாய்கள் கடித்து கொதறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கடலோர மாவட்டத்தில் மிகவும் முக்கியமான மாவட்டமாக இருப்பது கண்ணூர். இந்த மாவட்டத்தில் அண்மையில் தான் சிறுவன் ஒருவன் தெருநாய்களால் கடிக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தெருநாய்கள் மீண்டும் ஒன்பது வயது ஜான்வி என்ற சிறுமியை கடித்துள்ள வீடியோ அப்பகுதி மக்களை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளதுடன், அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் மனதில் பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜான்வி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மூன்று தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், நாய்கள் ஜான்வியை தரையில் இழுத்து, கடித்தது மட்டுமில்லாமல், ஒன்பது வயது சிறுமியை தனது இரைபோல இழுத்துச் செல்ல முயல்வதை அந்த வீடியோவில் காணலாம். உதவிக்காக அந்த சிறுமி அலறுவதையும், நாய்கள் அவளுடைய கைகள், கால்கள் மற்றும் தலை முழுவதும் பலமுறை கடிப்பதையும் அந்த வீடியோவில் காணலாம்.
உதவி கோரி ஜான்வியின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது நாய்கள் ஓடிவிட்டன. ஆனால் அதற்குள் நாய்கள் தலை, வயிறு, தொடை மற்றும் கைகளில் ஆழமான காயங்கள் ஏற்படும் அளவிற்கு கடித்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஜான்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முந்தைய நாய் தாக்குதல் சம்பவம்
கண்ணூர் மாவட்டம் சத்தினம்குளத்தில் அண்மையில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆதில் என்ற மாணவனையும் தெருநாய் தாக்கி கடித்த சம்பவத்தை தொடர்ந்து இந்த சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது. தற்போது சிறுமி அம்மாவட்ட மருத்துவமனையில் அதில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், ஜூன் 11ஆம் தேதி முழப்பிலங்காட்டில் தெருநாய்களால் நிஹால் என்ற பத்து வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நகராட்சி அலுவலர்களால் 31 நாய்கள் பிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நிஹாலின் தந்தை நௌஷத், வெறி பிடித்த தெருநாய் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கைகளைக் மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளார், தான் எதிர்கொண்ட சோகத்தை மற்றவர்கள் அனுபவிப்பதைத் தடுக்கும் நோக்கில் அவர் அந்த புகாரினை அளித்துள்ளார்.
கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.பி.திவ்யா, தெருநாய்களால் தனிநபர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு தேவை என தெரிவித்தார். மக்களின் உயிரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திவ்யா, வெறி பிடித்த தெருநாய்களை அகற்றுவதற்கான அனுமதியைப் பெறுவது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் இருப்பதாக குறிப்பிட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளுக்கு ஏபிபி நாடு டெலிகிராமில் இணைய இங்கு க்ளிக் செய்யவும்