நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் இதுவரை ஒரு பாடலும், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோரின் கேரக்டர் அறிமுகமும் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது.
இதனிடையே கடந்த வாரம் சைமா விருதுகள் விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போஸ்டர்கள் வெளியாகி ட்ரெண்டானது. தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முன்னேற்பாடு பணிகள், பாஸ்கள் தொடர்பான போட்டோ இணையத்தில் ட்ரெண்டான நிலையில், திடீரென ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிகழ்ச்சியில் பங்கேற்க அளவுக்கதிகமாக பாஸ் கேட்டு கோரிக்கைகள் வந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்டுகள் வெளியிட்டு உங்களை உற்சாகப்படுத்துவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.