நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
உலகின் அதிவேக பாலோயர்கள்:
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் குவித்து உலகின் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற டாப் 3 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்து விஜய் சாதனைப் படைத்துள்ளார்.
முன்னதாக கொரியாவின் பிரபல பாண்ட் இசைக்குழுவான பிடிஎஸ் (BTS) பாடகர் வி (V) 43 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களையும், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்று சாதனைப் படைத்துள்ள நிலையில், தற்போது 99 நிமிடங்களில் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று விஜய் சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் இந்தியாவில் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் குவித்த நபர் எனும் சாதனையையும் நடிகர் விஜய் படைத்துள்ளார். மேலும் நொடிக்கு நொடி நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு ஃபாலோயர்கள் எகிறி வரும் நிலையில், அவரது முதல் பதிவும் லைக்ஸ் அள்ளி வருகிறது.
அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ்:
ஹலோ நண்பா, நண்பிஸ் எனும் பதிவுடன் விஜய் கருப்பு நிற ஓவர் கோட் அணிந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த முதல் பதிவு 17 லட்சத்துக்கும் மேல் லைக்ஸ் அள்ளி இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், பிரபல மலையாளர் நடிகர் பிருத்விராஜ் நடிகர் விஜய்யை வெல்கம் செய்து தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
ஹேஷ்டேக் ட்ரெண்ட்:
மேலும் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், மற்றும் நடிகர் நடிகைகள் ராஷ்மிகா மந்தானா, ரம்யா பாண்டியன், ஐஸ்வர்யா லெஷ்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜூன் தாஸ், கவின், தொலைக்காட்சி பிரபலங்கள் டிடி, மாகாபா ஆனந்த், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலரும் விஜய் கணக்கை பின் தொடந்துள்ளனர்.
லியோ கெட் அப்பில் காஷ்மீர் லியோ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் பகிர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் #ThalapathyOnInstagram எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இதேபோல், 2019ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் இன்ஸ்டாகிராமில் இணைந்தபோது அவருக்கு இதேபோல் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்ததுடன் இன்ஸ்டாகிராம் ஸ்தம்பித்து அவரது கணக்கு முடங்கியது.
இந்நிலையில், 99 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற விஜய் 24 மணி நேரத்தில் எவ்வளவு ரசிகர்களாக் குவிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
”இன்ஸ்டாகிராமத்துல வாடி வாழலாம்...” என 2014ஆம் ஆண்டு பாடிய நடிகர் விஜய், 9 ஆண்டுகள் கழித்து தற்போது இன்ஸ்டாவில் எண்ட்ரி கொடுத்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.