தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி தி கோட் படத்தின் முதல் பாடல்  வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கோட் (Goat)


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட். பிரபுதேவா, பிரஷாந்த், லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா நாட்டில் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. கோட் படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்கில் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு அறிவித்தது.


இதனைத் தொடர்ந்து தற்போது கோட் படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகும் என உறுதி செய்துள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு. நாளை ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் “நாளை சம்பவம் உறுதி ”என்று இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்