தவிர்க்க முடியாத தளபதி




தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இருப்பினும், கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கள்ளச்சாராய மரணங்கள் காரணமாக, அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாமென தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ரசிகர்கள் பல்வேறு விதமாக விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை வாடிப்பட்டி பகுதியில் விஜய் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள், ஒரு நாள் முழுவதும் பயணிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கியுள்ளனர்.

 

கட்டணமில்லா பஸ்டிக்கெட்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், விஜயின் தீவிர ரசிகர்களும் விஜயின் பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாடினர். அப்போது வாடிப்பட்டி பேருந்துநிலையத்தில் ரசிகர்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தனியார் மினி பஸ் ஒன்றில் கட்டணமில்லாமல், ஒரு நாள் முழுவதிலும் டிக்கெட் வழங்க முடிவு செய்து, அதனை நடைமுறைப் படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் வாடிப்பட்டி முதல் மட்டபாரை கிராமத்திற்கு சென்று திரும்பும் மினி பஸ்சில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதற்காக அந்த பேருந்து உரிமையாளர் ஒத்துழைப்புடன் இந்த ஒரு நாள் சேவையை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழன் தாமு தலைமையில் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி, வாடிப்பட்டி ஒன்றிய தலைமை சார்பாக நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் முத்தையா, பூமி மற்றும் அலங்காநல்லூர் பரத் , மதுரை மேற்கு ஒன்றிய அய்யனார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 


 

கட்டணமில்லா பேருந்து


 

மேலும் த.வெ.க., நிர்வாகி தமிழன் தாமு நம்மிடம் பேசுகையில் ....," தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ரசிகர்கள் யாரையும் பிறந்தநாள் கொண்டாடவேண்டாம். அதற்கு பதிலாக உதவிகள் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் அமைதியான முறையில் இனிப்புகள் வழங்கி கட்டணமில்லா பேருந்தையும் இன்று மட்டும் இயக்கியுள்ளோம். தொடர்ந்து நாங்கள் பிறந்தநாள் விழாவிற்கு செலவு செய்ய வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தை கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்திற்கு செலவு செய்யலாம் என, முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

 

உதவிகள் செய்ய கோரிக்கை


 

மேலும் இதுகுறித்து வாடிப்பட்டி பகுதி மக்கள் கூறுகையில்...,” பிறந்தநாள் விழாக்களுக்கு கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என பணத்தை வீணடிக்காமல், மக்களுக்கு இது போல் உதவிகள் செய்வது நல்லது. மாணவர்களுக்கும், இயற்கையை பாதுகாப்பதற்கு த.வெ.க., முயற்களை தொடரவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.