தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது சபாநாயகர் அப்பாவு கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ரியாக்சன் பேரவையில் நெகிழ்ச்சியான நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாளில் கேள்வி நேரம் தொடங்கியதும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். கேள்வி நேரத்தில் சபாநாயகர் அப்பாவு சட்டத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
”மாண்புமிகு அமைச்சர்கிட்ட ஸ்பீக்கருக்கும் (TN Assmebly Speaker) ஒரு கேள்வி இருக்கு.” என்று பேச தொடங்கிய அப்பாவு, “ ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்’ கீழ், திசையன்விளை தாலுக்காவில் ( MUNSIF Cum JUDICIAL MAGISTRATE COURT) மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் (மாவட்ட கீழமை நீதிமன்ற) அமைக்க அரசாணை வெளியிட்டீர்கள்; அது எப்போது ஆரம்பிக்கப்படும் என்று தங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,” சட்டமன்றத் தலைவர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தப் பகுதியில் மிக விரைவில் நீதிமன்றம் அமைப்பதற்கான வேலைகளை உயர் நீதிமன்றம் முன்னெடுக்கும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை.” என்று தெரிவித்தார்.
இந்த கேள்வி - பதில் நிகழ்வின்போது சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு கருத்துத் தெரிவித்த அமைச்சரும் சட்டப்பேரவை முன்னவருமான துரைமுருகன்,” கேள்வி நேரத்தில் சபாநாயகரே கேள்வி கேட்கும் புதுமையை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.” என்று பூரிப்பு நிரம்ப தெரிவித்தார்.
அப்போது அப்பாவு, “ எனக்கும் தொகுதி (இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்) மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தொகுதி மக்களுக்காக கேட்கனும்லா.” என்று புன்னகையுடன் தெரிவித்துவிட்டு கேள்வி நேர உரையாடலுக்கு நகர்ந்தார்.