நிகழ்ச்சி ஒன்றில் ரீமேக் செய்ய ஆசைப்படும் ரஜினியின் படம் பற்றி நடிகர் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற விஜய்யிடம் தொகுப்பாளர் கோபிநாத், ‘ரஜினியின் படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆசைப்பட்டால் எந்த படத்தை தேர்வு செய்வீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு சற்றும் யோசிக்காமல் ‘அண்ணாமலை’ படத்தின் பெயரை சொல்கிறார். இந்த வீடியோ #31YearsOfAnnamalai என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்டாகி வருகிறது.
31 ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை
1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, மறைந்த நடிகர் சரத்பாபு, ராதா ரவி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி என பலரும் நடித்த படம் ‘அண்ணாமலை’. தேவா இசையமைத்த இப்படம் ரஜினியை கமர்ஷியல் கிங் ஆக மாற்றிய படங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
அண்ணாமலை படத்தின் முதல் பாதியில் பால்காரனாகவும், இரண்டாம் பாதியில் பிசினஸ்மேனாகவும் ரஜினி மிரட்டியிருந்தார் அதேபோல் சரத்பாபு நட்பு, துரோகம் கலந்த நண்பனாக ரஜினிக்கு ஈடாக தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். ஆரம்பம் முதல் முடிவு வரை எங்கேயும் சலிப்பு தட்டாமல் செல்லும் அண்ணாமலை படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, பல கோலிவுட் ஹீரோக்களுக்கும் மிகவும் பிடித்த படம்.
குறிப்பாக நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு தான் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பு ஆசையை தனது பெற்றோரிடத்தில் தெரிவித்த போது, அவர்கள் நடித்துக்காட்ட சொல்லியிருக்கார்கள். அதற்கு விஜய் அண்ணாமலை படத்தில் சரத்பாபுவிடம் ரஜினிகாந்த் தொடையை தட்டி சபதம் போடும் காட்சியைத் தான் நடித்து காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.