உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவிற்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனி உற்சாகம்தான். உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான மோதல் என்றாலே தனி ஆர்ப்பரிப்பும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.


இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 15-ந் தேதி நடக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.




ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த போட்டியின் நேரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. பெரும்பாலும் இந்த போட்டி பகல் – இரவு போட்டியாகவே நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் வரை போட்டியை கண்டுகளிக்க முடியும். இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மைதானத்தில் குவிவது வழக்கம்.


பெரும் எதிர்பார்ப்பு:


உலகக்கோப்பை என்றால் வழக்கத்தை விட பன்மடங்கு ரசிகர்கள் குவிவார்கள். இதனால், அன்றைய தினம் அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவின் நீல நிற படையும், பாகிஸ்தானின் பச்சை நிற படையும் குவிவார்கள் என்பது மட்டும் உறுதியாகும். 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது, இதனால், அந்த பெருமையை இந்த தொடரிலும் தக்க வைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு ஆகும்.


இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் அகமதாபாத் மைதானத்தில் கடந்த 1984ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் இந்திய அணி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. கடைசியாக இந்த மைதானத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணியுடன் டி20 போட்டியில் மோதியது.




மைதான நிலவரம்:


இந்த மைதானத்தில் இதுவரை 26 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், முதலில் பேட் செய்த அணி 14 முறையும், சேஸ் செய்த அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டாஸ் வென்ற அணி 15 முறையும், டாஸ் இழந்த அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.


இந்த மைதானத்தில் தனிநபர் அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி 144 ரன்களை 2000ம் ஆண்டு ஜிம்பாப்வே-க்கு எதிராக விளாசியுள்ளார். கடந்தாண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பிரசித் கிருஷ்ணா 12 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறந்து பந்துவீச்சு ஆகும்.  


தென்னாப்பிரிக்கா இந்த மைதானத்தில் 2010ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 365 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜிம்பாப்வே 85 ரன்கள எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். 2002ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 325 ரன்களை குவித்ததே சிறந்த சேசிங் ஆகும்.


மேலும் படிக்க: ICC WorldCup Schedule 2023: அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை திருவிழா.. முழு அட்டவணை உள்ளே..!


மேலும் படிக்க: ICC ODI World Cup 2023: சென்னை சேப்பாக்கத்தில் எத்தனை போட்டிகள்..? இந்தியாவுக்கு ஒரே ஒரு மேட்ச்சா..? சோகத்தில் தமிழ்நாடு ரசிகர்கள்!