விஜய்
நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் நடிப்பை முழுவதுமாக கைவிட்டு அரசியல் செயற்பாட்டில் களமிறங்க இருக்கிறார். தற்போது தனது கடைசி படமாக எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் , தெலுங்கு , மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பலர் விஜயின் ரசிகர்களே. இன்றைய தலைமுறை இயக்குநர்கள் பலருக்கு விஜயுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்பதே பெரும் கனவாக இருந்து வருகிறது. விஜயும் தனது கரியரில் தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்திருக்கிறார்.
விஜய் கடைசியாக நடித்த தி கோட் படத்தைப் பார்த்தபின் தான் அவசரப்பட்டு ரிடையர்மெண்ட் அறிவித்துவிட்டதாகவும் இல்லை என்றால் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ணியிருக்கலாம் என கூறியிருந்தார். தற்போது அதே போல் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடமும் அவர் கூறியுள்ளார் .
ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டிய விஜய்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய விஜயின் துப்பாக்கி படத்தில் ராஜ்குமார் பெரியசாமி உதவி இயக்குநராக பணியாற்றினார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது. திரையரங்கில் 30 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் 300 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. அமரன் படத்தைப் பார்த்த விஜய் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் சந்தித்து பாராட்டினார். இந்த சந்திப்பின் போது விஜய் தன்னிடம் கூறியதை ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துகொண்டுள்ளார். " விஜய் சாரை நேரில் சந்திக்க போனதும் அவர் என்னிடம் சொன்னது 'கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அடுத்தது நாம ஏதாவது பண்ணியிருக்கலாம். படம் பற்றி அவர் ரொம்ப சிம்பிளாக முடித்துவிட்டார். படம் பத்தி நான் என்னத்த சொல்றது.அதுதான் உலகமே சொல்லுதே. உன்ன நெனச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குனு சொன்னாரு."