நடிகர் விஜய்யின் தொடக்க காலத்தில் மாறுபட்ட நடிப்பில் வெளியான ‘நிலாவே வா’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


விஜய் - ஏ.வெங்கடேஷ் கூட்டணி 


பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தான் ‘நிலாவே வா’ படத்தை தயாரித்திருந்தார். ஏ.வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் விஜய், சுவலட்சுமி, சங்கவி, ரகுவரன், வினு சக்கரவர்த்தி, ஜெய்கணேஷ், சார்லி, சஞ்சீவ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் வெற்றியால் விஜய் - ஏ.வெங்கடேஷ் கூட்டணி மீண்டும் பகவதி படத்தில் இணைந்தனர். இப்படம் 14 ஆகஸ்ட் 1998 இல் வெளியானது. 


படத்தின் கதை 


ரகுவரனுக்கும், சுவலட்சுமிக்கு படத்தின் ஆரம்பத்திலேயே நிச்சயதார்த்தம் நடைபெற்று வரும். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய், சுவலட்சுமி இருவருமே காதலித்து வந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்போது பிளாஸ்பேக் காட்சிகள் செல்லும். மீனவ கிராமத்தில் வாழும் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த வினுசக்கரவர்த்தியின் மகன் விஜய்க்கும், இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஜெய் கணேஷ் மகள் சுவலட்சுமிக்கும் ஒரு கட்டத்தில் காதல் ஏற்படும்.






 பிரச்சினை ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியேறியாவது திருமணம் செய்வேன் என்ற தன் தங்கையின் எண்ணத்தை தெரிந்து கொண்ட அக்கா லதா, அதே கிராமத்தில் தான் காதலித்த கிறிஸ்தவரான ஸ்ரீமனுடன் ஓடி விடுவார். இதனால் கிராமத்தில் மதக்கலவரம் ஏற்படும். இதனைத் தீர்க்க இனி மாற்று மத திருமணம் நடைபெறாது என விஜய் உறுதியளிப்பார். இதனால் சுவலட்சுமியுடனான காதல் முறிந்து விடும். உண்மையை தெரிந்துக் கொண்ட ரகுவரன் இருவரையும் சேர்த்து வைத்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும். 


வித்யாசாகர் கொடுத்த முத்துக்கள் 


நிலாவே வா படத்திற்கு பாடல்கள் பலமாக அமைந்தது என்றே சொல்லலாம். வித்யாசாகர் இசையமைத்த நிலையில், வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.  குறிப்பாக ஹரிகரன், சித்ரா குரலில் வெளியான "நீ காற்று நான் மரம்"  பாடல் காதலர்களின் கீதமாக இன்றளவும் திகழ்கிறது. இந்த படத்தில் சுவலட்சுமியின் பெயர் சங்கீதா. எதிர்பாராதவிதமாக தனது மனைவி பெயரும் சங்கீதாவாக அமைந்ததால் விஜய் மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் இப்படம் நெருக்கமாக அமைந்தது என்றே சொல்லலாம். 


ராட்சகன் (1997) படத்தின் தோல்வியால் பின்னடைவை சந்தித்த தயாரிப்பாளர்  கே.டி.குஞ்சுமோன் இப்படத்தின் மூலம் மீண்டார். முதலில் ரக்ஷனா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் சுவலட்சுமி மாற்றப்பட்டார்.முதலில் நிலாவே வா படத்தில் வில்லனாக நடிக்க மன்சூர் அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் பின்னர்  ஆனந்தராஜ் வில்லனாக நடித்தார். இப்படி பல சிறப்புகளை கொண்டது நிலாவே வே படம் 25 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 


மேலும் படிக்க:  Neeya Naana: ஷாம்பூவுக்கு பதில் சீயக்காய்: உங்களுக்கு கோபம் வருதா? எனக்கும் வருது...நீயா நானாவில் கடுப்பான கோபிநாத்!