IND Vs WI, 5th T20: தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது.


ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நேற்று அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி,  இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே தேவையில்லாத ஷாட்டால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை கைப்பற்றிய ஆகேல் கில்லின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இது இந்திய அணிக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது. 17 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது. 


இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்ட சூர்யா மற்றும் திலக் வர்மா ஜோடி மிகச் சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா ரோசன் ஷேஸ் பந்தில் தனது விக்கெட்டை அவரிடமே இழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த சஞ்சு சாம்னும் ஏமாற்ற, கேப்டன் ஹர்திக் பாண்டியா சூர்யகுமாருடன் இணைந்தார். 


ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து வந்தாலும், சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். 15.5 ஓவர்கள் முடிந்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. 


சிறுது நேரத்தில் மழை நின்றதால், போட்டி அடுத்த 15 நிமிடத்தில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், இந்திய அணி அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 


இதனால் இந்திய அணி பெரிய டார்கெட்டை நிர்ணயம் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தினை சூர்யா வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவரும் 61 ரன்கள் சேர்த்த நிலையில் 17.5வது ஓவரில் தனது விக்கெட்டை எல்.பி.டபள்யூ முறையில் தனது விக்கெட்டை இழக்க, இந்திய அணி அவ்வளவுதான் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்தது. 


20வது ஓவரில் அக்‌ஷர் பட்டேல் பவுண்டரியும் சிக்ஸரும் விளாச, கடைசி 2 பந்துகள் இருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால், போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மைதானத்தின் தன்மையை நன்கு உணர்ந்து விளையாடியது. தொடக்கத்தில் கெயில் மேயர்ஸின் விக்கெட்டை இந்திய அணி கைப்பற்றியது மட்டும்தான் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அதன் பின்னர் தொடக்க வீரர் பிரண்டன் கிங்குடன் கைகோர்த்த பூரன் அதிரடியாக ஆட, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் மளமளவென ஏறியது. 10 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 96 ரன்கள் சேர்த்து மிகவும் வலுவாக இருந்தது. அதன் பின்னரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி காட்டிவர, வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது. 


ஆனால் அதற்கிடையில், மழை பெய்ய போட்டி தடைபட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 12.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 117 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் வெ.இண்டீஸ் வெற்றி பெற 45 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது. 30 நிமிடங்களுப்பின் தொடரப்பட்ட போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை இந்திய அணியால் தடுக்க முடியவில்லை. இந்திய அணியின் திலக் வர்மா தனது முதல் சர்வதேச விக்கெட்டாக பூரனின் விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில் வெ.இண்டீஸ் அணி போட்டியை 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  இந்தியாவை வீழ்த்தி, போட்டியோடு தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது. இறுதி வரை களத்தில் இருந்த பிரண்டன் கிங் 55 பந்தில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.