லியோ படத்தில் நடித்த எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைத்து பார்க்கவில்லை என்று நடிகர் வையாபுரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன், அர்ஜூன், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லியோ”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகினது. கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் தொடர் விடுமுறை காரணமாக வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. 


இப்படியான நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிகர் வையாபுரி நடித்திருப்பார். காமெடி நடிகராக பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமான அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். இதனிடையே இப்படத்தில் அவர் ஜோதிடக்காரராக நடித்திருப்பார். சொல்லப்போனால் கதையில் ஒரு திருப்புமுனை ஏற்பட அவர் தான் காரணமாக இருந்திருப்பார். கிட்டதட்ட 14 வருடங்களுக்குப் பின் விஜய் படத்தில் நடித்த அவர் லியோ படம் குறித்த சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


அதில், “நிஜமாகவே லியோ படத்தில் நடித்த எனக்கு  இப்படி ஒரு வரவேற்பு வரும் என தெரியாது. ரொம்ப சந்தோசமா இருக்கு. எப்படி பிக்பாஸ் போய்ட்டு வந்த பிறகு என் பசங்களை ஸ்கூல்ல உள்ளவங்க இவங்க தான் வையாபுரி பசங்க என சொல்லி பார்க்க வந்தாங்களோ, அந்த மாதிரி லியோ ரிலீஸூக்கு பிறகு ஏகப்பட்ட போன் கால், மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைப் பார்த்து என் பையன் அப்பா நாம திரும்பவும் பிக்பாஸ் போய்ட்டு வந்த மாதிரி இருக்குன்னு சொன்னான். நான் சாதாரணமா 2 சீன் வந்தோம் அப்படித்தான் நடித்து முடித்த பிறகு நினைச்சேன். 


எல்லா வில்லன்களும் இருக்கும் போது நடுவில் நான் இருந்தேன். ஒரு செட்டுல இவ்வளவு பெரிய கூட்டத்தோட, நிறைய கேமரா வச்சி ஷூட் போய் ரொம்ப வருஷம் ஆச்சு. நான் பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு. குறிப்பா விஜய்யுடன் 2009ம் ஆண்டு வெளியான வில்லு படத்துக்கு பிறகு இப்பதான் நடிக்கிறேன். அவர்கிட்ட கூட அதையே சொன்னேன். ரொம்ப நேரம் நாங்க பேசிட்டு இருந்தோம். படக்குழு சின்ன சீன் தான் அது நல்ல சீன் தான் என சொன்னார்கள். இன்றைக்கு இருக்கும் தலைமுறையினர், விஜய் கூட நடிக்க வேண்டும் என சொல்லி நான் கேட்டு வாங்கி தான் சென்றேன். அதை விஜய்யிடம் சொல்ல, அவரோ சின்ன சீன் தான் ஆனால் செம சீன் என தெரிவித்தார். 


ஆனால் நடிக்கும்போது இவ்வளவு பேசப்படும் என தெரியாது. என் பொண்ணு 2வது நாள் படம் பார்க்கும்போது என்னோட சீன் வரும்போது பயங்கர சத்தம், கைதட்டல் வந்ததாக தெரிவித்தார். எனக்கு சஞ்சய் தத் போன்ற மூத்த நடிகர் முன்னால் நடிக்கும்போது பயம் இல்லை. அது கமல் எனக்கு கற்றுக் கொடுத்தது. என் கழுத்தை பிடிக்கும் சீன் ஒன்று இருக்கும்.அதை டேக் எடுத்த பின் சாரி சாரி என மன்னிப்பு கேட்டார்” என தெரிவித்துள்ளார்.