கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் பெரிதும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் சினிமாவில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுக்கு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் அவர் பழையபடி நடிப்பதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது குறித்து தனியார் சேனலுக்கு நடிகர் வடிவேலு அளித்த பேட்டியில், “நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். இரண்டு படங்கள் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என்று கூறினார்.
லைகா தயாரிப்பில் நாய் சேகர் திரைப்படம் தயாராக இருந்த நிலையில், அந்த தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ஒரு படம் எடுத்து வந்தது. நாய் ஒன்றும் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இதற்கிடையில் சம்மந்தப்பட்ட அந்த தலைப்பை பெற வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் அதே போல தயாரிப்பாளர் லைக்கா ஆகியோரும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.
எப்படியும் அந்த தலைப்பை பெற்றுவிடுவோம்... அந்த தலைப்பை வைத்திருப்பவர் வடிவேலுவின் நெருங்கிய நண்பர் என்பதால் எப்படியும் அந்த தலைப்பை பெற்று விடும்வோம் என இயக்குனர் சுராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் ஒரு பதிவை சற்று முன் வெளியிட்டார்.
அதில் நாய் சேகர் என்கிற பெயருடன் நடிகர் சதீஸ், நாயுடன் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிஷோர் ராஜ்குமார் இயக்கும் அந்த படத்திற்கு தியேட்டரில் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுத்தர முன்வரவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அத்துடன் ‛வடிவேலு சாரின் ரசிகன் என்கிற முறையில் இந்த போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும்,’ தனது பதிவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாய் சேகர் படத்தின் தலைப்பு வடிவேலுவிற்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர் நடித்த கேரக்டர் பெயரே வடிவேலுக்கு இல்லாமல் போனது வருத்தம் என்றாலும், வேறு ஏதாவது ஒரு தலைப்பில் நிச்சயம் வடிவேலு படம் வரும் என்பதால் நிச்சயம் மீண்டும் வடிவேலுவை எதிர்பார்க்கலாம்.