கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்த வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த மைக்கேல் ஹோல்டிங், தனது 66 வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். ஹோல்டிங்கின் அறிவிப்புக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
17 ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டின் குரல் என தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கிரிக்கெட்டுக்காக செலவிட்ட மைக்கேல் ஹோல்டிங், இப்போது ஓய்வு அறிவித்துள்ளார்.
ஹோல்டிங் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்தது. 1975-ம் ஆண்டு முதல் 1987 வரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளராக விளையாடினார். 1987-ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவித்த அவர், கமெண்ட்ரி பாக்ஸில் தஞ்சம் புகுந்தார். கிரிக்கெட் களத்தில் அதிரடி காட்டியவர், கமெண்ட்ரி தளத்திற்கு அறிமுகமான சில வருடங்களில் அங்கேயும் அதிரடி காட்டத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாயிட் என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தினர். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். உலகெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பிய இந்த சம்வத்தை அடுத்து, ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற இயக்கம் பிரபமலமானது. அப்போது கிரிக்கெட் கமெண்ட்ரியில் இருந்த மைக்கேல் ஹோல்டிங், நிற வேறுபாடுக்கு ஆதரவாக நடக்கும் அநியாயங்களுக்கு எதிரான தனது குரலை பதிவு செய்தார். கிரிக்கெட்டில் இருக்கும் சமமற்ற சூழலை, வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டியவர்.
மைக்கேல் ஹோல்டிங் குரல் எழுப்பியதை தொடர்ந்து, விளையாட்டு துறையில் அரங்கேறி வரும் நிற வேறுபாடு, இன வேறுபாடு பிரச்சனைகள் பேசு பொருளானது. வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியபோதும், வேறு அணிகள் விளையாடியபோதும் தன்னுடைய நியயாமன வர்ணனையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹோல்டிங்.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடரோடு கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு ஓய்வு அறிவித்துள்ளார் மைக்கேல் ஹோல்டிங். 66 வயதான அவர், ஓய்வு பெற்றதற்கு சச்சின் டெண்டுல்கர், ஹர்ஷா போக்லே ஆகியோர் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். ஹேப்பி ரிடைர்மெண்ட் ஹோல்டிங்!