மத்திய மண்டலத்தை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 12 சதவீத பேர் 2 தவணையும் செலுத்தி விட்டனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 12 ஆம்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் ஒரு நாளில் மட்டும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை 3 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.86 லட்சம் பேர், முன்களப் பணியாளர்கள் 11.89 லட்சம் பேர், 18-44 வயது உள்ளவர்கள் 1.89 கோடி பேர், 45-60 வயது உள்ளவர்கள் 1.20 கோடி பேர், 60 வயதுக்கு மேல் 55.26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதன்படி பார்த்தால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள பொதுமக்களில் 52 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 15 சதவீத பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். திருச்சியில் 14,91,503 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 11,63,524 பேர் முதல் தவணையும், 3,27,979 பேர் 2 தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 4,29,850 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,20,549 பேர் முதல் தவணையும், 1,09,301 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் 4,62,926 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 3,88,036 பேர் முதல் தவணையும், 74,890 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 3,75,473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,05,041 பேர் முதல் தவணையும், 70,432 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். கரூரில் 4,86,995 பேர் முதல் தவணையும், 1,21,253 பேர் இரண்டு தவணை என்று மொத்தம் 9,03,245 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெரம்பலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 3,02,795 பேரில், 2,46,043 பேர் முதல் தவணையும், 56,752 பேர் 2வது தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.
தஞ்சையில் 11,35,631 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 9,18,992 பேர் முதல் தவணையும், 2,16,639 பேர் 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். திருவாரூரில் 6,09,317 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 5,05,684 பேர் முதல் தவணையும், 1,03,633 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். நாகையில் 4,07,702 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 3,28,978 பேர் முதல் தவணையும், 78,101 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். மயிலாடுதுறையில் தற்போது வரை 3,71,983 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,09,188 பேருக்கு முதல் தவணையும், 62,795 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதை தீவிரப்படுத்தி உள்ளது, ஆனால் மக்கள் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் தயக்கம் காட்டாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டினால் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.