ஒரு கல் ஒரு கண்ணாடி படம் உருவானது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கலகத்தலைவன்’. இப்படத்தின் ஹீரோயினாக நடிகை நிதி அகர்வாலும், முக்கிய வேடங்களில் ஆரவ், கலையரசன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இசையமைத்துள்ளனர். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கலகத்தலைவன் நவம்பர் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற உதயநிதியிடம், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதவன் படத்தின் ஒரு காட்சியில் நான் நடித்த நிலையில் ஏதோ பெரிய நடிகர் மாதிரி எல்லாரும் எனக்கு கைதட்டி உசுப்பேத்தி விட்டுட்டாங்க. அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் விநியோகம் பண்ணேன். அப்போது இயக்குநர் ராஜேஷிடம் சிவா மனசுல சக்தி, பாஸ் படம் நல்லாருக்கு என சொன்னேன்.
உடனே அவர் என்னிடம் நீங்க நடிக்கிறீங்களா என கேட்டார். அதற்கு ஏதாவது கதை லைன் இருந்தா சொல்லுங்களேன் என நான் கேட்டேன். உடனே அவர் நீங்களும் உங்க ஃப்ரண்டும் பாண்டிச்சேரி போய் உங்க லவ்வரோட கல்யாணத்தை நிறுத்துறீங்க என சொன்னதும் சூப்பர் சார் பண்ணலாம் என சொன்னேன். பின்னர் யார் அந்த ஃப்ரண்டு என கேட்டேன். வேற யாரு சந்தானம் தான் என ராஜேஷ் சொன்னார்.
அந்த ஒரு லைன் மட்டும் தான் படத்துக்கு தேவை என நினைத்து எப்போ ஷூட்டிங் போலாம் என தினமும் ராஜேஷிடம் போன் பண்ணி கேட்டேன். முதல் படம் அப்படிங்கிறதால நல்லா பண்ணலாம் என நினைச்சேன். அதன்படி ஹன்சிகா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ள வந்தாங்க. ஷூட்டிங் எடுக்குறாரு..எடுக்குறாரு..எடுத்துகிட்டே இருக்காரு. கிட்டதட்ட 120 நாட்கள் ராஜேஷ் படம் எடுத்தாரு. 2 பாகமா இருந்துச்சு. நீங்க பார்த்தது பாதி படம் மட்டும் தான்.
அப்படத்தில் சந்தானத்திற்கு இன்னொரு தனியா லவ் ஸ்டோரி இருக்கு. ஆண்ட்ரியா கெஸ்ட் ரோலில் 20 நாட்கள் நடிச்சாங்க. ஆனால் எடிட்டிங்கில் அந்த காட்சிகள் தூக்கப்பட்டது. எப்படியும் படம் ஓடாது என நினைத்த எங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் ஹிட்டானது . அதன்பிறகு படம் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து ஒன்றரை ஆண்டுகளாக வந்த கதையை வேண்டாம் என தவிர்த்தேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்க சரண்யா பொன்வண்ணன், அழகம் பெருமாள், மதுமிதா, சிறப்பு தோற்றத்தில் நடிகை சிநேகா, ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.