கிரீடம் படத்தின் போது அஜித் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் ஷூட்டிங்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அப்படத்தில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த நடிகர் திருமுருகன் கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் “களவாணி”. வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் வில்லனாக நடித்தவர் திருமுருகன். இவர் தான் அப்படத்தின் இணை இயக்குநர் ஆவார். பலருக்கும் திருமுருகன் ஒரு உதவி இயக்குநர் என்பது தெரியாது. ஆனால் தனது வில்லத்தனமான நடிப்பால் மறக்க முடியாத நபராக மாறியுள்ள திருமுருகன் தனது சினிமா வாழ்க்கை குறித்தும், கிரீடம் படத்தில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த நடிகர் திருமுருகன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஏ.எல்.விஜய்யிடம் அறிமுகம்
2002 காலக்கட்டத்துல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.எல்.விஜய் அங்கிருந்து வெளியேறி படம் பண்ண வேண்டும் என வருகிறார். அப்போது தான் எங்கள் சந்திப்பு நடந்தது. நாங்க கிட்டதட்ட 100 விளம்பரங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளோம். களவாணி பட இயக்குநர் சற்குணமும் அதில் தான் வேலை செய்தார். அவரும் நானும் ஒரே ஊர். அதை தாண்டி இருவரும் தனித்தனியாக உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்தோம்.
நான் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரிடம் வேலை செய்யலாம் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. உடனே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநாக இருந்த வெற்றிமாறன் உள்ளிட்டோர் எனக்கு நண்பர்களானார்கள். அப்போது வாலி படம் முடித்து விட்டு எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி ஒன்று என்னை மாற்றியது. உடனே நான் வேலையெல்லாம் விட்டுட்டு சினிமாவுக்குள் களமிறங்கி தான் ஏ.எல்.விஜய்யிடம் வேலை செய்தேன். அஜித் நடித்த க்ரீடம் படத்தில் நான் அசோசியேட் டைரக்டர்., சற்குணத்தின் வாகை சூடவா, களவாணி படத்துல கோ- டைரக்டராக பணியாற்றினேன்.
களவாணியில் அறிமுகம்
சற்குணம் முதலில் களவாணி படம் பண்ற பிளான்லேயே இல்ல. அவர் ஒரு முன்னணி ஹீரோவை வச்சு ஆக்ஷன் படம் பண்ண நினைத்தார். உடனே கதையை கேட்ட நான் இந்த படம் எடுத்தா எல்லாரும் திரும்பி பார்க்குற டைரக்டரா இருக்க முடியுமா? என கேட்டேன் . இதனையடுத்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்தார். இது 2005ல் நடந்த சம்பவங்கள். அப்புறம் 5 ஆண்டுகள் கழித்து களவாணி படம் மூலம் தான் அவர் இயக்குநரானார்.
முதலில் களவாணி படத்துக்கு இருந்தது நெகட்டிவ் கிளைமேக்ஸ் தான் இருந்தது. நான் சும்மா கிண்டலுக்கு சொன்ன விஷயத்தை மற்றவர்களிடன் சொன்னபோது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
கிரீடம் படத்தின் அனுபவம்
கிரீடம் படப்பிடிப்பு சமயத்தில் தமிழ்நாட்டில் அஜித்துக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் ஷூட்டிங்கை விசாகப்பட்டினத்திற்கு மாற்றினார்கள். ஆனாலும் அங்கு செம கூட்டம். அஜித்துக்கு கூட குறைவான ரசிகர்களே வந்தார்கள். ஆனால் த்ரிஷாவுக்கு வந்த கூட்டம் அதிகமானது. இதனை நாங்களே எதிர்பார்க்கவில்லை.
ஒரு காட்சியில் அஜித், த்ரிஷா இருவரும் பிள்ளையார் சிலை முன்பு சாமி கும்பிடுவது போன்று படமாக்கினோம். அப்போது இருவரும் ஓடி வந்தார்கள். என்னவென்று கேட்டால் பிள்ளையார் சிலை அருகில் நின்ற ஆலமரத்தில் ஒரு 500 பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதனால் சாக்குப்பவுடர் வாங்கி பேன் வைத்து முழுவதுமாக மக்களை மறைச்சிட்டு தான் ஷுட் பண்ணோம்.
ஒரு சண்டை காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டு விட்டது. நைட் முழுக்க தூங்காம இருந்தாரு. மறுநாள் காலையில் அவர் கேரவன் வெளியே நின்னுட்டு இருந்தாரு. என்ன ஆச்சுன்னு அவரின் உதவியாளரிடம் கேட்டேன். காயத்தால ஏற்பட்ட வலியில அஜித்தால் படுக்கவும், உட்காரவும் முடியவில்லை என சொன்னார்கள். ராஜ்கிரண் ஜெயிலுக்குள் உட்காந்திருக்கும் அஜித்தை அடிப்பது போல காட்சி எடுத்தோம். அப்போது உள்ளே சென்ற ராஜ்கிரண் அஜித் வலியால் துடிப்பதை பார்த்து ஃபீல் பண்ணாரு. நாங்க உடனே அஜித்திடம் ரெஸ்ட் எடுங்க. கேப் எடுத்துட்டு பண்ணிருக்கலாம் என சொன்னதுக்கு அதை மறுத்து ஷூட்டிங் முடியும் வரை ஒத்துழைத்தார் என திருமுருகன் தெரிவித்துள்ளார்.