பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய தமிழ்நாடு அரசு வரும் நவம்பர் 12-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் வரும் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.


முன்னதாக, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த இட ஒதுக்கீடு பாகுபாடற்றவை என்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தேசிய அளவில் 50 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அளவை இச்சட்டம் மீறவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று பதில் அளித்துள்ளது.









பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொது பிரிவினருக்காக கொண்டு வரப்பட்டது. இந்த பொது பிரிவினர்தான், பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படுகிறது. காலம் காலமாக, இந்திய சமூகத்தால் ஒடுக்கப்பட்ட விளம்புநிலை மக்களை தவிர்த்து விட்டு பிற பிரிவினருக்கு இந்த இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைகிறது.


கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பில் 103ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. கொண்டு வரப்பட்ட உடனேயே, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


தமிழ்நாடு எதிர்ப்பு


இந்த சட்டத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், எதிராக உச்ச நீதிமன்றத்தில் 40 மேற்பட்ட மனுக்கள் தொடரப்பட்டன. நாட்டிலேயே அதிக பட்ச சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு ஏன்?


இந்த இடஒதுக்கீட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறிப்பாக, கடந்த 1992ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், குறிப்பிட்ட நபர் பின்தங்கியவரா என்பதை அறிய சாதியைதான் அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் தேசிய அளவில் 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீட்டின் அளவு செல்லக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


10 சதவிகித இடஒதுக்கீடு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றுகிறது என்றும் மனுதாரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் கூட மாற்ற முடியாது என கடந்த 1973ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


பல கேள்விகளுக்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு


பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளதா போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தீர்ப்பு அமையும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 


தனியார் நிறுவனங்கள், இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்படுமா? வரலாற்று ரீதியாக சாதி ரீதியாக மத ரீதியாக ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கும் இன்றைய தீர்ப்பு பதில் அளித்துள்ளது.


மத்திய அரசின் வாதம் என்ன?


இந்த இட ஒதுக்கீடு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவும் என்றும், அரசியலமைப்பின் கொள்கைகளையோ அல்லது முந்தைய உச்ச நீதிமன்ற உத்தரவுகளையோ மீறவில்லை என்றும் அரசாங்கம் வாதிட்டது.


கடந்த 2019ஆம் ஆண்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இந்தாண்டு செப்டம்பர் மாதம், கிட்டத்தட்ட ஆறரை மணி விசாரணைக்கு பிறகு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓய்வு பெற உள்ள யு யு லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.