தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. புதுச்சேரி உள்பட போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி திமுகவினருக்கு கடிதம் எழுதியுள்ள அக்கட்சி தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், "ஒற்றை ஆட்சி முறைக்கு மக்கள் ஆதரவு தரவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மகத்தான வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள் மக்கள். அந்த வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் உடன்பிறப்புகளாகிய நீங்கள். தமிழ்நாடு - புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணியின் தோழமைக் கட்சியினருடன் தோளோடு தோள் நின்று அவர்களின் பங்களிப்புடன் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. கொள்கை உறுதியும், இலட்சியப் பார்வையும், திட்டமிட்ட உழைப்பும், தெளிவான வியூகமும் இருந்தால் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் வெல்லவும் முடியும், அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
2022-ஆம் ஆண்டு விருதுநகரிலே நடைபெற்ற முப்பெரும் விழாவிலே நான் உரையாற்றும்போது, ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தேன். அது முழக்கமாக மட்டும் இருந்து விடக்கூடாது, முழுமையான வெற்றியாக விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பூத் வாரியாக மேற்கொண்டது தி.மு.கழகம். பாக முகவர்களை நியமித்தல், பூத் கமிட்டிகளை அமைத்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் கழகத்தின் கட்டமைப்பும் வலிமையும் மேம்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டை 5 மண்டலங்களாகப் பிரித்துக்கொண்டு மாநாடுகள் போன்ற அளவில் பாக முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைகள் நடத்தப்பட்டன. அவற்றில் நானும் பங்கேற்று, கழகத்தின் தேர்தல் பணிகள் எப்படி அமையவேண்டும் என்பதையும், முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன். ஒவ்வொரு நாளும் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தேர்தல் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தேன். நானும் ஓய்வெடுக்கவில்லை. கழக உடன்பிறப்புகளாம் உங்களையும் ஓய்வெடுக்கவிடவில்லை.
"இந்தியா கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்": முரசம் கேட்டதும் போர்க்களத்திற்குப் பாயும் குதிரை வீரர்கள் போல தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் வெற்றிக்களமாட ஆயத்தமாக இருந்தது தி.மு.க உடன்பிறப்புகளின் படை. 2019-ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர் எப்படி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து நின்றார்களோ, அதுபோலவே இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் இலட்சிய நோக்கத்துடன் ஒரே அணியாக ஒருங்கிணைந்து நின்றனர். நமது நோக்கத்தை அறிந்து கூடுதலான ஆதரவை வழங்கிய இயக்கங்களும் தோள் கொடுத்து நின்றன. இந்தியா கூட்டணியின் நம்பிக்கை மிக்க களமாகத் தமிழ்நாடு அமைந்தது.
மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டார்கள். வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். தி.மு.கழகம் மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். தோழமைக் கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் வழியிலேயே அவரது கட்சியினரும் செயல்பட்டனர். மற்றொருபுறம், இந்த மதவாத சக்திகளுக்கு அடிமைச் சேவகம் செய்த அ.தி.மு.க. தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழ்நாட்டுக்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே தேர்தல் களத்தில் எனது பரப்புரை வியூகமாக அமைந்தது.
தி.மு.க வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது. தமிழ்நாட்டு மேடைகளில் தமிழைப் போற்றுவது போலப் பேசும் பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் எந்தளவுக்கு வஞ்சித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம்.
கடந்த மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் எத்தனையெத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, எத்தனை கோடி மக்கள் அதனால் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொன்னோம். இந்தியா கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் - ஜனநாயகத்தை மீட்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையும் தோழமைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் நலன் காக்கும் வகையில் இருப்பதை விளக்கினோம்.
"மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாது" பன்முகத்தன்மை கொண்ட – மதநல்லிணக்கத்துடனான - சமூகநீதி இந்தியாவைப் பாதுகாத்திட இந்தியா கூட்டணியால்தான் முடியும் என்பதைக் கொள்கை வழியில் எடுத்துரைத்தோம். எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டிய அவசியத்தை தோழமைக் கட்சியினரும் எடுத்துச் சொன்னார்கள்.
நாம் மக்களை நேரடியாகச் சந்தித்தோம். மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அவர்களைச் சரியாகச் சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்தோம். நம்மிடம் மேலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். அவர்களின் கோரிக்கைகளை - கேள்விகளைச் செவிமடுத்தோம். அதைவிட முக்கியமாக, தி.மு.க.கூட்டணி மீதுதான் தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் களத்தில் கண்டோம். அவர்களின் நம்பிக்கைதான் இன்று முழுமையான வெற்றியாக விளைந்திருக்கிறது.
இந்த வெற்றிக்குத் துணைநின்ற கழகத்தின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், கழகமே உயிர்மூச்சு என வாழும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எந்தளவுக்கு உடன்பிறப்புகள் களப்பணியாற்றினார்களோ, அதுபோலவே தோழமைக் கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளிலும் கழகத்தினர் சுற்றிச்சுழன்று பணியாற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
தி.மு.க தலைமையிலான அணி மீது முழுமையான நம்பிக்கை வைத்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் பயன்மிகு திட்டங்களுக்கு நற்சான்றளிக்கும் வகையில் நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை அள்ளித் தந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு கோடானுகோடி நன்றி.
"சிறுபான்மையினர் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது": ஒன்றிய ஆளுங்கட்சியின் அதிகார பலம், அடக்குமுறைத்தனம், அவதூறு பரப்புரைகள் இவற்றைத் தகர்த்தெறிந்து நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரே அணி முழுமையான வெற்றி பெற்றது என்பது ஒரு சில மாநிலங்களில்தான். அதில் இந்தியா கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்திருப்பது தமிழ்நாடு - புதுச்சேரியில் மட்டும்தான் என்பது உடன்பிறப்புகளின் ஓயாத உழைப்புக்கும், நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குமான சான்று.
நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பா.ஜ.க.வின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.
சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்.
சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்.