அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி மக்கள் மனதில் நேரடியாக  சிம்மாசனத்தில் அமர்ந்து சாதனை படைத்த திரைப்படம் ' ஜெய் பீம்'. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. 


 



மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி :


சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த இந்த புரட்சி திரைப்படம் பல சர்ச்சைகளை கடந்தும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படத்திற்காக காத்து கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


மீண்டும் சமூக பிரச்சனையை அலசும் ஒரு திரைப்படம் :


ஜெய் பீம் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் நேர்காணலில் பேசிய போது "ஜெய் பீம் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னரே அடுத்த படத்தின் ஸ்டோரியை நடிகர் சூர்யாவிடம் சொல்லி அதற்கு அவர் ஒப்புதலும் அளித்துவிட்டார். ஜெய் பீம் திரைப்படம் இப்படி ஒரு வரவேற்பை பெரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஜெய் பீம் படத்தின் வெற்றி  நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்த படத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்த்ததில் நிச்சயமாக உருவாகவிருக்கும் புதிய படம் ஜெய் பீம் படத்தை விடவும் அதிக வரவேற்பு பெறும் என நம்பிக்கை உள்ளது. அதனால் புதிய படத்தில் நடிகர் சூர்யாவை வைத்து உருவாக்க தயாராகிவிட்டோம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2023 முதல் தொடங்கவுள்ளோம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படமும் ஒரு சமூக பிரச்சனையை அலசும் ஒரு திரைப்படமாக அமையும்" என குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல். இது போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


பிஸியாக இருக்கும் சூர்யா :


தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் "வணங்கான்" திரைப்படத்திலும் , இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்" திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள "விடுதலை" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் "வாடிவாசல்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த வகையில் சமீபத்தில் தான் "விடுதலை" படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.   


விரைவில் நடிகர் சூர்யா - இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் காம்போவில் உருவாகவிருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.