Surya: அயன் படத்தின் மூலம் தனக்கு கம்பேக் கொடுத்த இயக்குநர் கே.வி. ஆனந்த் குடும்பத்தினரை, நடிகர் சூர்யா தனது அப்பாவுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்க இருக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். தொடக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வந்த படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும், 2009ம் ஆண்டு வெளிவந்த அயன் படம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்தது.
நகை, வைரம் கடத்தல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அயன் படம், சூர்யாவுக்கு முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்தப் படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி இருப்பார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, பிரபு, ஜெகன், கருணாஸ் என பலர் நடித்திருப்பார்கள். கதை, காதல், ஆக்ஷன், காமெடி, பாடல் என அனைத்திலும் ஸ்கோர் செய்த அயன் படம் வசூலில் வெற்றிப்பெற்றது.
அயன் படத்தின் வெற்றியால் ராசியான சூர்யா - கேவி ஆனந்த் காம்போ, அடுத்தடுத்த படங்களிலும் இணைந்தது. இருவரின் கூட்டணியிலும் மாற்றான், காப்பான் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இதனால், கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா இடையே நட்பும் அதிகரித்து இருந்தது. இந்தச் சூழலில் தான் 2021ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் கே.வி.ஆனந்த் உயிரிழந்தார். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சூர்யா தனது அப்பா சிவக்குமாருடன் கே.வி.ஆனந்த் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
கேவி ஆனந்தின் மகளுக்கு திருமண வாழ்த்து கூறிய சூர்யா, தனது அப்பாவுடன் இணைந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகர் சிவக்குமார், தான் காந்தி பற்றி எழுதிய சித்திரச் சோலை என்ற நூலை கே.வி.ஆனந்தின் மகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மறைந்த இயக்குநரின் குடும்பத்தினரை சூர்யா நேரில் சென்று சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1994ம் ஆண்டு மலையாளத்தின் வெளிவந்த ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்தின் மூலம் திரைக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். முதல் படத்திலேயே சிறப்பான ஒளிப்பதிவு செய்ததற்காக தேசிய விருது பெற்ற இவர், கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், சூர்யா நடித்த அயன், ஜீவா நடித்த கோ, தனுஷ் நடித்த அனேகன், விஜய் சேதுபதி நடித்த கவன், சூர்யா நடித்த காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க: Suriya - Karthi: உயிரிழந்த ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா - கார்த்தி!