பெயர் குறிப்பிடப்படாத நிலையில் கௌதம் மேனனின் நிறைய படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன் என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார். 


1998 ஆம் ஆண்டு இயக்குநர் நாகராஜ் இயக்கத்தில் முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், பாலாசிங், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான  படம் ‘தினந்தோறும்’. இந்த படத்திற்கு ஓவியன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற இப்படத்தின் இயக்குநராக நாகராஜ் கடைசியாக 2013 ஆம் ஆண்டு மத்தாப்பூ என்ற படத்தை இயக்கினார். இப்படியான நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில் தனது திரையுலக பயணம் பற்றி பேசியுள்ளார். 


அதில், “நான் கௌதம் மேனன் இயக்கிய பல படத்துக்கு நான் பெயரில்லாமல் வசனம் எழுதுவதில் வேலை பார்த்து கொடுத்திருக்கிறேன். அவரும் என்னிடம் என்ன சொல்வார் என்றால், ‘எனக்கு சம்பளம் கொடுக்கிறது பத்தி பிரச்சினை இல்ல. என்னோட சம்பளத்துல கூட கொடுத்திருவேன். ஆனால் தயாரிப்பு தரப்புல உங்களுக்கு இதுவே தெரியாதா? - வசனம் எழுத வேற சம்பளம் கொடுக்கணுமா?’ என கேட்பார்கள் என சொல்வார்.


எனக்கு சூழல் புரியும். அதனால் எதுவும் சொல்லாமல் வேண்டியதை எழுதி கொடுத்து விடுவேன். சரியான பணத்தை கொடுத்து விடுவார்கள். நான் எழுதிய விஷயங்கள் நிறைய வெற்றியை நோக்கி போயிருக்கு. அந்த பெயரை வைத்து நான் எதுவும் செய்யப்போவது இல்லை. நான் இயக்குநர் ஆக இருந்தபோதே எதுவும் பண்ணவில்லை. அப்படி இருக்கும்போது இதற்காக என்ன எதிர்பார்க்க போகிறேன். மேலும் குடியை நான் விட்டுட்டு வெளியே வர வேண்டும் என நினைக்கும்போது எனக்கான ஒன்றிற்காக பயணப்பட வேண்டும் என நினைத்தேன்.


நான் அவருடன் தொடர்ந்து பணியாற்றினால் எனக்கு தேவையான பொருளாதார உதவிகள் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் வாழ்க்கையில் என்னால் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்க முடியாது. நான் படம் பண்ணியிருக்கவே மாட்டேன். வாழ்க்கை போயிருக்கும். நான் வேறு ஒன்றை தேடி தான் சினிமாவுக்குள் வந்தேன். அதை நடுவில் விட்டுவிட்டேன். மறுபடியும் எனக்கு அந்த இடம் இருக்கு. என்னால் முடியும் என நான் நினைக்கிறேன் " என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார். 


அதேசமயம் என் வீட்டில் எப்போதும் மதுபாட்டில்கள் இருக்கும். மதுவுக்கும் அடிமையாக இருந்தேன். நடிகர் விஜய்க்கு கதை சொல்லும்போது குடித்திருந்ததை எஸ்.ஏ.சந்திரசேகர் கண்டுபிடித்தார். என்னுடைய கதை பிடித்திருந்தாலும் நான் படம் பண்ணுவேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதனால் அந்த வாய்ப்பை இழந்தேன்” என நாகராஜ் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.