தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் தெலுங்கிலும் தனக்கென ஒரு மார்கெட்டை வைத்திருப்பவர் சூர்யா. அதேபோல் அவரது தம்பிக்கு தெலுங்கில் தனி மார்க்கெட் உண்டு. சிறுத்தை படமெல்லாம் தெலுங்கில் பட்டையைக் கிளப்பிய படங்கள். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலுக்கு பங்கமில்லாமல் பயணம் செய்து வருகிறது எதற்கும் துணிந்தவன். முன்னதாக படம் ரிலீசுக்காக சூர்யா கடுமையான ப்ரமோஷன்களில் ஈடுபட்டார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதாலும் பட விளம்பரங்கள் கொஞ்சம் எக்ஸ்டா டோசாகவே இருந்தது. பல இடங்களுக்கும் புரமோஷன்களில் ஈடுபட்ட சூர்யா பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் உக்ரைன் போர் குறித்து பேசினார். அதேபோல் தெலுங்கு ப்ரொமோஷனில் சூர்யா கொரோனா காலத்து சினிமா குறித்து சில தகவல்களை பேசினார்.
அது இணையத்தில் சர்ச்சையானது. தெலுங்கு ப்ரொமோஷனில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, “கொரோனா காலத்தில் எப்படி தைரியமாக இருக்க வேண்டுமென்று இந்திய சினிமாத்துறைக்கே கற்றுக்கொடுத்தது தெலுங்கு இண்டஸ்ட்ரி தான். அகன்தா முதல் பீம்லா நாயக் வரை தெலுங்கு படங்களை இந்தியாவில் வெளியிட்டனர். அப்படங்களுக்கு மக்களும் வரவேற்பை கொடுத்தனர். அதைப்பார்த்துதான் மற்ற திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கை வந்தது” என்றார்.
இது தமிழ் சினிமா ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. கொரோனா காலத்தில்தான் மாஸ்டரும், அண்ணாத்த, மாநாடு போன்ற படங்கள் வெளியாகின. அதுபோக சூர்யா தொடர்ந்து ஓடிடிக்கு படங்களை கொடுத்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் தியேட்டர் பக்கமே படத்தை கொண்டு வருகிறார். காத்திருந்து முந்தைய படங்களை தியேட்டரில் வெளியிட்டு இருக்கலாமே எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் சூர்யா பேசியது மிகவும் சாதாரண விஷயம் அவர் சொன்ன கருத்தை விஷமத்தனமாக பலரும் திரித்து பேசுவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பாடலுக்கும் எதிர்ப்பு:
முருகக்கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாடலாசிரியர் யுகபாரதி எழுதி, டி.இமான் இசையமைத்துள்ள உள்ள உருகுதைய்யா பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இப்பாடலை படத்திலிருந்து நீக்க கோரி அகில இந்திய நேதாஜி கட்சியின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறும் போது, பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று படம் வெளியான பிறகு தான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்ததாகவும், எனவே பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், கடவுள் வாழ்த்து பாடல் என தெரிந்தும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.