நடிகர் சூர்யா தமிழகம் முழுவதுமுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா நடிப்பில் இந்தாண்டு மட்டும் 2 படங்கள் வெளியானது. ஒன்று பாண்டிராஜ் இயக்கத்தில் ஹீரோவாக அவர் நடித்த “எதற்கும் துணிந்தவன்” . மற்றொன்று கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” படம்.  இதில் விக்ரம் படத்தில் “ரோலக்ஸ்” என்னும் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யாவின் கேரக்டர் பவர்ஃபுல்லான ஒன்றாக அமைந்தது. 






இதுவே விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக அமைந்துள்ளதால், ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில்,சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூப்பரான அப்டேட் ஒன்றை தெரிவித்தார். அதில் ரோலக்ஸ் கேரக்டரை கொண்டு தனிப்படம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் “வணங்கான்” படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 






ஆனால் சில வாரங்களுக்கு முன் வணங்கான் படத்தின் திரைக்கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நடிகர் சூர்யாவுக்கு அந்த கதை உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. ஆக பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்குப் பின் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதாக இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 






இதற்கிடையில் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள 42வது படம் முழுக்க முழுக்க வரலாற்று பின்னணியில் 3டியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தன் நடிகர் சூர்யா தமிழகம் முழுவதுமுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சமீபகாலமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து சந்திப்பது வழக்கமாகி வரும் நிலையில், அவரது பாணியில் சூர்யாவும் கொரோனா தொற்றுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.