உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். மேலும் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து கொண்டு இருக்கிற காரணத்தினால் அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. கோவை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். 






மேலும் இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியதாவது: 6 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொறுத்தவரை கொரோனாவிற்கு என்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது, கடந்த அலையின்போது தமிழக முதலமைச்சர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழகத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், தமிழ்நாடு முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு என்றும் கூட பிரத்யேகமாக படுக்கைகள் உள்ளது. மருந்து நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்தி உள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. அதோடு மட்டுமில்லாமல், ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் மக்கள் அச்சபடதேவையில்லை , ஆனால்  மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முக கவசங்கள் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாதிரியான விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 




இந்நிலையில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறையை வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்க அறிவுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷண் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் அந்த சுற்றறிக்கை வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்குமாரிடம் கேட்ட போது, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் திருச்சி விமான நிலையத்தில் அமல்படுத்தப்படும் என்றார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.