திருச்சி மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும், சாலையோரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வேலை செய்யும் இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருகின்றன. அதுபோல், திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலை பகுதியில் உள்ள காலி இடத்தில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்ரக பிளாஸ்டிக் குழாய்களை அடுக்கி இருப்பு வைத்து இருந்தனர். அதன் அருகே குப்பை கொட்டும் இடம் உள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பிளாஸ்டிக் குழாய்கள் இருந்த பகுதிக்கு பரவியது. இதனால் பிளாஸ்டிக் குழாய்கள் பற்றி எரிய தொடங்கின. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.சில நிமிடங்களில் அனைத்து குழாய்களும் கொழுந்துவிட்டு எரிந்தன. மேலும் அருகில் நின்ற ஆட்டோவும் தீக்கிரையானது. இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அனைத்து குழாய்களும் எரிந்து, உருகி நாசமாகின. இருப்பினும் தீ மேலும் பரவாமல் இருக்க அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.






மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த உயர்ரக பிளாஸ்டிக் குழாய்களின் மதிப்பு ரூ.1¼ கோடி இருக்கும் என்றும், அவை அனைத்தும் எரிந்து விட்டதாகவும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பைக்கு யாராவது தீ வைத்து சென்றார்களா? அல்லது அந்த வழியாக சென்றவர்கள் புகைத்துவிட்டு அணைக்காமல் சிகரெட்டை வீசியதால் தீப்பிடித்ததா? என்ற ேகாணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. 




திருச்சி மாநகரில் ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அதற்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து தீக்கிரையானதால், இந்த பணியில் மேலும் தொய்வு ஏற்படுமோ? என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். குப்பையில் பிடித்த தீ, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களில் பரவி 50 மீட்டர் உயரத்துக்கும் மேல் பற்றி எரிந்தது. இதனால் அதில் இருந்து கரும்புகை அதிக அளவில் வெளியேறியது. இதை அந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து பார்க்க முடிந்தது.  இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பாக  காணப்பட்டது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.