தமிழ் சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அடுத்த கட்ட முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இந்தாண்டு ஹீரோவாக அவர் நடித்த எதற்கும் துணிந்தவன், கேமியோ ரோலில் நடித்த விக்ரம் ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள அவர் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் மூலம் படத் தயாரிப்பில் களமிறங்கிய சூர்யா பசங்க-2, கடைக்குட்டி சிங்கம், மகளிர் மட்டும், உறியடி-2, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார். சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த விருமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா மிகுந்த தன்னடக்கத்துடன் பேசியது அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றது.
இதனிடையே அகரம் என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வரும் சூர்யா அடுத்தக்கட்டமாக முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தனது சினிமா வாழ்க்கையில் அடுத்ததாக தியேட்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக 5 தியேட்டர்களை குத்தகைக்கு வாங்கி நடத்த உள்ளதாகவும், தொடர்ந்து மாவட்டந்தோறும் தியேட்டர்களை நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறியவும், அதனை நிறைவேற்றவும், விநியோகஸ்தர்களின் இன்னல்களை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் முயற்சிப்போம் என ஏற்கனவே சூர்யா தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக இந்த தியேட்டர்கள் நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்