ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் முந்தைய படமான கங்குவா திரைப்படம் பெரியளவில் வெற்றிபெறாத நிலையில் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கார்த்திக் சுப்பராஜின் திரைக்கதை , சூர்யாவின் நடிப்பு , சந்தோஷ் நாராயணனின் இசை என படத்தில் நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருந்தன.  அடுத்தடுத்த நாட்களில் வசூலில் ஏற்றம்காணவே செய்தது. முதல் நாளில் ரெட்ரோ படம் ரூ 46 கோடி வசூலித்தது. தொடர்ந்து 5 நாளில் உலகளவில் ரூ 104 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

ரெட்ரோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று மே 7 ஆம் தேதி ரெட்ரோ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

அகரம் அறக்கட்டளைக்கு 10 கோடி அளித்த சூர்யா

இந்த கொண்டாட்டத்தோடு சூர்யா மற்றொரு முன்னெடுப்பையும் எடுத்துள்ளார். ரெட்ரோ படத்தின் லாபத்தில் இருந்து ரூ 10 கோடியை தனது அகரன் அறக்கட்டளைக்கு நிதியளித்துள்ளார் சூர்யா இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறியுள்ளார் சூர்யா " நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து என் முயற்சிகளை அங்கீகரித்த இந்த சமூகத்துடன் என் வெற்றியை பகிர்ந்துகொள்வது எனக்கு மன நிறைவை தருகிறது.ரெட்ரோ படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் பேராதரவு இந்த வெற்றியை பரிசளித்திருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும் ஆதரவுமே நான் மீண்டெழ துணை  நிற்கிறது.  பொதுமக்களுக்கும் எனது அன்பான தம்பி தங்கைகளுக்கும் நன்றி. ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கையோடு  அகரம் அறக்கட்டளைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் குறைவானவர்களுக்கே உதவி செய்ய முடிகிறது .ரெட்ரோ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவில் கிடைத்த அன்பு தொகையில் இருந்து ரூ 10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறேன். " என சூர்யா கூறியுள்ளார்