தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் மிக முக்கியமானவரான இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த சந்தான பாரதி மற்றும் பி.வாசு ஆகிய இருவரும் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் முதன் முறையாக ஒரு படத்தை இயக்கினார்கள். இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துடன் நல்ல நட்பு இருந்து வந்ததது. முதல் படத்தை இயக்குகிறார்கள் என்பதால் நண்பர்களின் கோரிக்கையின் படி நடிக்கிறேன் என ரஜினியும் கமலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. 


 



 


அப்படி பாரதி வாசு இணைந்து இயக்கிய முதல் படம் தான் பன்னீர் புஷ்பங்கள். இயக்குநர் ஸ்ரீதரிடம் வாய்ப்பு கேட்டு வந்து போன சுரேஷுக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விடலைப்பருவத்தில்  வருவது காதல் அல்ல அது வெறும் ஒரு பருவ கோளாறு தான் என்ற மெசேஜை  இளைஞர்களுக்கு கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த பருவத்தில் வரும் யதார்த்தமாக காதல், கோபம், ஆத்திரம், உணர்ச்சி என நவரசங்களையும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முகத்தில் வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் சுரேஷ். முதல் படம் என்ற சுவடே தெரியாத அளவுக்கு மிக சிறப்பாக நடித்திருந்தார். நடிகர் சுரேஷுக்கு மட்டுமின்றி அவரின் ஜோடியாக நடித்த சாந்தி கிருஷ்ணாவும் அதுவே முதல் படம். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


பள்ளி மாணவர்களாக சுரேஷ் மற்றும் சாந்தி கிருஷ்ணா நடிக்க அந்த பள்ளியின் ஆசிரியராக நடிகர் பிரதாப் போத்தன் நடித்திருந்தார். சுரேஷ் நடித்த கதாபாத்திரத்தில் கமலும், பிரதாப் போத்தன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினியும் நடிக்க இருந்தார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. அப்படி இந்த இரு ஸ்டார்களும் நடித்து இருந்தால் இன்று வரை அது பெரிய அளவில் பேசப்படும் ஒரு படமாக அமைந்து இருக்கும். 


 




மேலும் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் நடிகர் சுரேஷ் நடித்து கொண்டிருந்த அதே சமயத்தில் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடிக்க இளமையான தோற்றம் கொண்ட ஒரு நடிகருக்கான தேடல் நடைபெற்று வந்தது. பாரதிராஜா எதிர்பார்த்தது போலவே சுரேஷ் இருக்க அவருக்கு 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் அவர் நடித்து வந்ததால் கால்ஷீட் காரணமாக அந்த வாய்ப்பு நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக்குக்கு வந்தது. அதுவே அவருக்கும் அவரின் ஜோடியாக நடித்த நடிகை ராதாவுக்கும் அறிமுக படமாக அமைந்தது. 


அதை தொடர்ந்து சுரேஷ் மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர்.