தான் நடித்த மைக்கேல் படம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.


சந்தீப் கிஷன்


’யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சந்தீப்புக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மாயவன் , கசடதபர உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் சந்தீப் நடித்திருந்தார். 


மைக்கேல்


சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியப் படம் மைக்கேல். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. ரஞ்சித் ஜெயக்கொடி முன்னதாக இயக்கிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் நல்ல வெற்றி பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடுதலாக திவ்யான்ஷா கெளஷிக் , கெளதம் மேனன், விஜய் சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. சந்தீப் கிஷன் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் மைக்கேல். கிட்டதட்ட கொரிய படமான 'The BitterSweet Life' படத்தின் சாயலில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும் படத்தில் அடிப்படை கதை உறுதியானதாக இல்லாதது இப்படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. வலிந்து திணிக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள், எதார்த்தத்துடன் பொருந்தாமல் சூப்பர் ஹீரோ இமேஜ், கே,ஜி.எஃப் வகையிலான பில்ட் அப் காட்சிகள் என படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்களை சலிப்படையச் செய்தன


இப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டிருந்தார். “ ஒரு நேர்மையான முயற்சி ஆனால் அது சரியாக வழங்கப்படவில்லை.  நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.


படம் சரியாக வரவில்லை என்று எனக்கு முன்னமே தெரியும்


மைக்கேல் படம் வெளியாகி ஓராண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் அப்படம் சரியாக வரவில்லை என்று தனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், தான் அதை இயக்குநரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். சந்தீப் தற்போது தெலுங்கில் நடித்துள்ள ‘ஊரு பேரு பைரவகோனா’ படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்து வருகிறார். அப்போது மைக்கேல் படத்தின் தோல்வி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதோ “ ஆமாம் வசூல் ரீதியாக பார்த்தால் மைக்கேல் படம் சரியாக ஓடவில்லைதான் அந்தப் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்தார்கள். அதில் இருவர் படம் நிச்சயம் ப்ளாக்பஸ்டர் ஆகும் என்று நம்பினார்கள். ஒருவர் மட்டும் படம் சரியாக வரவில்லை என்று ரிலீஸுக்கு 12  நாள் முன்பு என்னிடம் சொன்னார். அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய பிரஷரை நான் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை அதனால் நான் அது தொடர்பாக எதுவும் செய்யவில்லை. படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் நான் படம் பார்த்தேன். படம் சரியாக வரவில்லை என்று எனக்கு தெரிந்தது. தொழில்நுட்ப ரீதியாக மைக்கேல் ஒரு நல்ல படம். ஆனால் நாங்கள் கதைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டோம். சரியாக சொல்லப் பட்டிருந்தால் மைக்கேல் ஒரு அற்புதமான படமாக வந்திருக்கும் . நாங்கள் நினைத்தது வரவில்லை என்பது ரிலீஸுக்கு முன்பாகவே எனக்கு தெரிந்தது இன்னும் சிரமமானதாக இருந்தது.” என்றார்