அயன் படத்தின் வெற்றியால் தன் வாழ்க்கையில் நடந்த சோக சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் நடிகர் ஜெகன் தெரிவித்துள்ளார். 


2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெகன்.  இவர் 2007 ஆம் ஆண்டு கிங் குயின் ஜேக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெகனுக்கு சூர்யா நடிப்பில் வெளியான ‘அயன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பையா, சிக்கு புக்கு, கோ, அம்புலி, வத்திக்குச்சி, பட்டத்து யானை, என்றென்றும் புன்னகை, வல்லினம், நான் சிகப்பு மனிதன், இரும்புக்குதிரை, கவண், மிஸ்டர் சந்திரமௌலி, அசுரகுரு, ஜாக்பாட் என பல படங்களில் நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாமல் கடவுள் பாதி மிருகம் பாதி, கனெக்‌ஷன், இங்க என்ன சொல்லுது, ரௌடி பேபி, ரன் பேபி ரன் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதனிடையே தன்னுடைய சினிமா கேரியர் பற்றி நேர்காணல் ஒன்றில் ஜெகன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  அதில், “நான் 2010 ஆம் ஆண்டு தான் முழு நேர நடிகனாக மாறினேன். அயன் படம் நடிக்கும்போது 65 நாட்கள் லீவு போட்டு நடிச்சேன். அந்த படம் பார்த்த எடிட்டர் ஆண்டனி உள்ளிட்ட பலரும் ஜெகன் உனக்கு ஃபிலிம்பேர் அவார்டு கண்டிப்பாக கிடைக்கும் என சொன்னார்கள். நீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகி விடுவாய் என அப்படி இப்படி சொன்னார்கள். நானும் அதையெல்லாம் நம்பினேன். அதற்கு காரணம் அயன் ஒரு சிறந்த படம். படம் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது.


ஆனால் உண்மை என்னவென்று பார்த்தால் என்னை அடுத்த 8 மாதம் யாரும் நடிக்க கூப்பிடவேயில்லை. நான் ஒரு கட்டத்தில் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக மாறிவிட்டதே என நினைத்து நான் மறுபடியும் என் முதலாளிக்கு போன் பண்ணி வேலைக்கு வர்றேன் என சொல்லி சென்றும் விட்டேன். வேலைக்கு போய் 10 நாட்கள் இருக்கும் நிலையில் லிங்குசாமி அவரின் பையா படத்தில் என்னை நடிக்க கூப்பிட்டார். அப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பித்தும் விட்டது. ஏதோ ஒரு நடிகர் தேதி கொடுக்கவில்லை. அதனால் கார்த்தியின் நண்பன் ரோல் எனக்கு அமைந்தது” என தெரிவித்திருந்தார். 


அதேசமயம் அயன் படத்தை எடுத்த மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் அப்படத்தை தொடர்ந்து கோ, கவண் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் என குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!