தென்னிந்திய சினிமாவில்  முன்னணி நடிகருள் ஒருவராக இருப்பர் நடிகர் விஜய் . இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் “பீஸ்ட்” இந்த படம் விஜயின் 65-வது படமாக உருவாகி வருகிறது. விஜயின் வெற்றி படங்களுக்கு மத்தியில் , சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதில் ஒன்றுதான் “சுறா”. இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படம் குறித்து தமிழ் மற்றும் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று விஜய் ரசிகர்களை கடும் கோபத்திற்கு அளாக்கியுள்ளது.



சந்தீப் கிஷன் தமிழில் கசட தபற, மாயவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலம் , கிட்டத்தட்ட  20 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வெப் சீரிஸான ஃபேமிலி மேனிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் சந்தீப். இன்னிலையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் .” சுறா படத்தை இப்போதான் பார்த்தேன், என் மூளையே வெளியே வந்திடும் போல இருக்கு, விஜய் கதையை கேட்கும் பொழுது அவருக்கும் அப்படிதான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்” என வெளிப்படையான பதிவு ஒன்றினை வெளியிட்டார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் சந்தீப்பை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.



 


சிலர் விஜய் படத்தை விமர்சிப்பதன் மூலம் சந்தீப் புகழ் தேடுகிறார் இதற்காக அவர் வெட்கப்படவேண்டும்  என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்த சந்தீப் “   இந்த பதிவு பற்றி வெட்கப்பட ஒன்றுமில்லை. நான் விஜய் படங்களை பார்த்து ரசித்துதான், வளர்ந்தேன். இடையில் நான் வழக்கமான திரைப்பட பார்வையாளர்களாக இருந்தேன்.  கடந்த 10 ஆண்டுகளில் அவர் நிறைய என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரின் ரசிகன் என நான் பெருமையாக சொல்வேன்” என தெரிவித்துள்ளார். எனினும் விஜய் ரசிகர்கள் அவரை விடுவதாக தெரியவில்லை. 



இந்நிலையில் மீண்டும் ட்வீட் செய்த சந்தீப் கிஷன், “எனக்கு நான் சொன்னது தப்பா தோணலப்பா, நான் இதை பதிவு செய்யனும்னு தோணுனதால பதிவிட்டேன், இந்த ட்வீட்ட  சேமித்து வச்சு , எப்போ எங்கிட்ட கேட்டாலும் , என் பதில் ஒன்னாதான் இருக்கும்,  ஆனால் இது எல்லாத்தையும் தாண்டி நான் விஜய் சார் நேசிக்கிறேன். பல கடினமான சூழல்ல அவர் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்” என குறிப்பிடுள்ளார். இதற்கிடையில் அவரவர் கருத்துகளை தெரிவிக்க அவரவருக்கு உரிமை உண்டு என பலரும் சந்தீப் கிஷனுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.