சூரி
காமெடியில் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது நாயகனாக வெற்றிப் பாதையில் பயனித்து வருகிபவர் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமானார் சூரி. நகைச்சுவை தவிர்த்து தன்னால் உணர்ச்சிவசமாகவும் நடிக்க முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்து காட்டினார். தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் சர்வதேச அளவில் இன்றுவரை விருதுகளை குவித்து வருகிறது.
சூரி நடிக்கும் மாமன்
சூரி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டு ஜீ ஃபை ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் மூலம் கவனமீர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் சூரியின் அடுத்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு மாமன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
வாய்பிளந்த கே.எஸ் ரவிகுமார்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சூரி கே.எஸ் ரவிகுமார் தொகுத்து வழங்கும் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன தகவல் கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலரை ஆச்சரியமடைச் செய்துள்ளது. " 1998 ஆம் ஆண்டுக்கு பின் வந்த 100 இயக்குநர்களில் 95 இயக்குநர்களின் படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் இயக்கிய படையப்பா படத்தில் நான் எலக்ட்ரிசியனாக வேலை செய்தேன். அஜித் சார் நடித்த வில்லன் படத்திற்கு உங்கள் ஆபிஸ் முன் ரேஷன் கடை மாதிரி க்யூ நிற்கும். அப்போது வாய்ப்பு கேட்டு நான் வந்திருக்கிறேன். " என சூரி சொல்வதைக் கேட்டு கே.எஸ் ரவிகுமார் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.