இந்தியத் திருநாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்பவர்களில் அரசியல் தலைவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில், அரசியல் ரீதியாக தேசிய அளவில் அதிகம் பேசப்பட்ட ஆளுமைகள் யார் யார்? இதோ பட்டியல்!


நரேந்திர மோடி


ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும் அதைத் தீர்மானிப்பவர்களாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியில் கோலோச்சும் நரேந்திர மோடி, அரசியல் ஆளுமையாக முதலிடத்தில் மிளிர்கிறார்.


மோகன் பாகவத்


பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளார். ஆட்சிப் பொறுப்பில் மோகன் இல்லாவிட்டாலும் பாஜகவை இயக்குவதே ஆர்எஸ்எஸ்தான் என்னும் கருத்து நிலவி வரும் சூழலில், மோடிக்கு அடுத்த சக்தி வாய்ந்த மனிதராக மோகன் பாகவத் உள்ளார்.


இந்துத்துவக் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் அமைப்பின் ஆர்எஸ்எஸ்ஸும் அதன் அடிநாதமாக மோகன் பாகவத்துக்கும் இருக்கின்றனர். இந்த நிலையில், அவரின் பேச்சுக்கு சங் பரிவாரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அமித் ஷா


நாட்டின் ஆளுமைமிக்க தலைவர்கள் பட்டியலில், அமைச்சர் அமித் ஷாவுக்கு முக்கிய இடமுண்டு.  நாட்டிலேயே அதிக காலம் உள்துறை அமைச்சராக இருக்கும் பெருமை, அத்வானி, பண்டுக்குப் பிறகு மோடியின் தளபதியான அமித் ஷாவுக்கே உண்டு.


அரசியலில் முழுமையாக சுற்றிச் சுழன்றாலும் பிற பாஜககாரர்களைப் போல அல்லாமல், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுபவர் அமித் ஷா. 


ராகுல் காந்தி


நாட்டுக்கு 3 பிரதமர்களைக் கொடுத்த நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் தனக்கெனத் தனி அடையாளத்தைக் கொண்டிருப்பவர் ராகுல் காந்தி. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல், பாரத் ஜூடோ யாத்திரை மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணித்தார். இதன்மூலம் லட்சக்கணக்கான  மக்களின் கவனத்தை ஈர்த்தார்.


ஆளுங்கட்சிகள் செய்யும் தவறுகளை எல்லாம் துணிச்சலுடன் தட்டிக் கேட்பதில் ராகுலுக்கு முக்கிய இடம் உண்டு.


சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்


தேசியத் தலைவர்களுக்கு மத்தியிலான அரசியல் ஆளுமைகள் பட்டியலில், எப்படி மாநிலத் தலைவர்களின் பெயர் இடம் பெறுகிறது என்று கேள்வி எழலாம். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சி அமைத்திருக்கிறது. எனினும் முந்தைய காலங்களைப் போல, தனிப்பெரும்பான்மையோடு பாஜக தனித்து ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்திருக்கிறது.


இந்தியாவில் பாஜக எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற இந்தக் கட்சிகளின் ஆதரவு அவசியம். முக்கியமாக அரியாசனத்தில் வீற்றிருக்கவும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் அவசியம் என்பதால்,அவர்களின் செல்வாக்கு தேசிய அளவில் உயர்ந்திருக்கிறது.


மு.க.ஸ்டாலின்


மாநில அளவிலான தலைவராக இருந்தாலும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு இண்டியா கூட்டணியில் முக்கிய இடமுண்டு. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி, தன் ஆளுமையை நிரூபித்துள்ளார்.


நாடு முழுவதும் இரண்டு முறையும் வீசிய மோடி அலையைத் தாண்டி, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவை அசகாய வெற்றி பெற வைத்ததன் மூலம் தன் இருப்பை வலுப்படுத்தி உள்ளார் ஸ்டாலின்.


வேறு யார்? யார்?


இவர்கள் தவிர, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சியின்  தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆளுமைகளாக மிளிர்கிறார்கள்.