Actor Soori : கொட்டுக்காளியாக சூரியின் மிரட்டும் அவதாரம்... படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
தற்போது சூரி நடித்துவரும் கொட்டுக்காளி படத்தின் சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

மக்களை மகிழ்விக்கும் கலைஞன் ‘சூரி’
திரையில் நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் எல்லோரும் பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் தங்கள் முயற்சியின் மூலமாகவே மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். இதில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தங்களை கேலிக்குள்ளாக்கி, வருத்திக் கொண்டு பிறரை சிரிக்க வைத்து மகிழ்ச்சி காண்பதே தாங்கள் படும் கஷ்டங்களுக்கு அருமருந்து என பிரபலங்களே சொல்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் சூரி.
மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் அவர், 10க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஒரே ஒரு நொடி மட்டுமே தோன்றுவார். இப்படியான நிலையில் தான் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம். இதில் அசால்ட்டாக 50 பரோட்டாக்களை சாப்பிடுபவராக அவர் செய்த சம்பவம் சரித்திரமாக மாறியது. தனக்கென ஒரு பாடி லாங்குவேஜ், வட்டார மொழியை உருவாக்கி கொண்டு ரசிகர்களிடம் புகழ்பெற ஆரம்பித்தார்.
Just In




வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், களவாணி, நான் மகான் அல்ல, சுந்தரப்பாண்டியன், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜில்லா, பூஜை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரத்துரை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கடைக்குட்டி சிங்கம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
காமெடி டூ ஹீரோ
பெரும்பாலான படங்களில் காமெடியனாக நடித்தாலும் சூரியின் நடிப்பு பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியது என்று திரைக்கலைஞர் முதல் சாமானிய ரசிகர்கள் வரை அறிந்திருந்தார்கள். அவருக்கு ஏற்ற ஒரு நல்ல வாய்ப்பு வரும் வரை காத்திருந்த சூரிக்கு வெற்றிமாறன் மூலமாக அந்த வாய்ப்பு வந்தது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலைப் படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
அடுத்துக் கொட்டுக்காளி
விடுதலைப் படத்தைத் தொடர்ந்து தற்போது சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் கொட்டுக்காளி. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள சூரி தற்போது பி எச் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கொட்டுக்காளி படத்திலும் நடித்து வருகிறார். விக்னேஷ் ஷிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரித்த கூழாங்கல் திரைப்படத்தை இயக்கி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர் இயக்குநர் வினோத்ராஜ். மலையாள நடிகை அன்னா பென் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களில் முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார் சூரி.