எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் 'விடுதலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள அப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரியும், போராளியாக வாத்தியார் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம் மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல்முறையாக வெற்றிமாறன் படத்துக்கு இளையராஜா இசையமைத்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என கூறப்படுகிறது. 


 



சூரியின் லேட்டஸ்ட் ட்வீட் :


படத்தின் நாயகன் நடிகர் சூரி, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் நடித்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அவரின் இசையில் நான் நடித்தது எனது அம்மா அப்பா செய்த புண்ணியம் என ஏற்கனவே அவர் தனது தனது மகிழ்ச்சியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் இந்த வேலையில் மேஸ்ட்ரோ இளையராஜாவை சற்றுமுன் நேரில் சென்று சந்தித்து அவரிடம் இருந்து  ஆசி பெற்றுள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதனுடன் " சற்று நேரமுன்பு... "இசை"யை‌ சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்... இறைவனுக்கு நன்றி!" என்ற ஒரு டீவீட்டை போஸ்ட் செய்துள்ளார். சூரியின் இந்த போஸ்ட் ட்விட்டரில் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


பெரிய வாய்ப்பை பெற்ற சூரி :


ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து ஒரு நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் நடிகர் சூரி. தமிழ் சினிமாவிற்கு ஒரு மிக பெரிய அடையாளமாக இருக்கும் இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கிடைத்துவிடாது. அப்படி இருக்கையில் ஹீரோவாக, இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குனர் வெற்றிமாறனின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதை பெரிய பாக்கியமாக கருதுகிறார் நடிகர் சூரி என்பது அவரின் ஒவ்வொரு போஸ்ட் மூலம் வெளிப்படுகிறது. உழைப்பும், பொறுமையும் ஒருவரை எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு சூரி ஒரு சிறந்த உதாரணம்.      


இதுவே முதல்முறை :


மேலும் நடிகர் சூரி கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். இளையராஜா அவருடைய புதிய ஸ்டூடியோவில் தான் விடுதலை படத்திற்காக பாடல்களை இசையமைத்தார். அதே சமயம் தனது 45 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் ஒரு ஹீரோவை அருகில் வைத்து கொண்டு படத்தின் பாடல்களுக்கு டியூன் போட்டது இதுவே முதல் முறை என அவர் கூறியதாக நடிகர் சூரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.